நல்ல முயற்சி

”விழுவது தவறல்ல, விழுந்து எழாமல் இருப்பதுதான் தவறு” என்று பொதுவாக சொல்வார்கள். அதுபோல, தோற்பது தவறல்ல, தோற்றாலும் மீண்டும் முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு. இன்றைய நற்செய்தியில் பலமுறை வலைகளைப் போட்டும், மீன் ஒன்றும் கிடைக்காமல், இனிமேல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனது வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த, பேதுரு, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் முயற்சி செய்கிறார்.

பேதுருவுக்கு கடல் அன்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். ஒருநாள் மீன்பாடு இருக்கும், மற்றொரு நாள் வெறுமனே திரும்பி தான் வரவேண்டியிருக்கும் என்பது பேதுரு அறியாத ஒன்றல்ல. இதுதான் அவரது வாழ்க்கை. எனவே, மீன்பாடு இல்லையென்றாலும், பேதுருவுக்கு பெரிய வருத்தம் ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல், கடலுக்குச் சென்று திரும்பியவுடன் தனது வலைகளை, பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார். அதே வேளையில் இயேசு மீண்டும் வலைகளைப் போடச்சொன்னவுடன், அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, மீண்டும் ஒரு முயற்சி எடுப்போமே, என்று வலைகளைப் போடுகிறார். நிச்சயமாக, பேதுருவுக்குள்ளாக, அவருடைய உள்ளுணர்வு இன்னொருமுறை முயற்சி செய்யலாம் என்று சொல்லியிருக்கும். மற்றொரு மனம், இவ்வளவு முயற்சி செய்து கிடைக்காதது, இனிமேல் கிடைக்கவாப் போகிறது? என்றும் சொல்லியிருக்கும். ஆனால், இயேசு சொன்னவுடன் பேதுரு, மற்றொரு முறை முயற்சி செய்ய முடிவு செய்கிறார்.

நமது வாழ்வில் ஒருபோதும் சோர்ந்து போகக்கூடாது. நமது முடிவு மரணமாகத்தான் இருக்க வேண்டும். அதுவரை நாம் தொடர்ந்து வாழ்வில் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் சோர்ந்து போகிறபோது, இந்த பகுதியை மீண்டும் ஒருமுறை வாசிப்போம். தியானிப்போம். அது நமக்கு நிச்சயம் நல்ல உற்சாகத்தைத்தரும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: