“நான் ஆண்டவரைக் கண்டேன்”

இது பலருக்கு இயற்கை. ஒன்றை ஒருவரிடம் சொல்லச் சொன்னால், சொன்ன செய்தியை மறந்துவிடுவர்.தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக விவரித்த பின், புறப்படுவதற்கு முன், ஐயோ ஒன்றை மறந்துவிட்டேனே, இதைச் சொல்லச் சொன்னார் என்று விஷயத்தைச் சொல்லுவார்கள். அவர் சொன்னதை விட தான் அனுபவித்தது, பார்த்தது, கேட்டது, ருசித்தது, ரசித்தது அவ்வளவு ஆழமான அழுத்தத்தையும் தாக்கத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும்.

உயிர்த்த இயேசு மரியாவிடம் சீடர்களுக்குச் சொல்லச் சொன்ன செய்தி, “என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” (யோவா20:17)என்பது. ஆனால் மரியா சொன்னதோ முதன் முதலில் “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்பது. அதன் பின்னரே உயிர்த்த இயேசு சொன்ன செய்தியைச் சொல்கிறார். மகதலா மரியா இவ்வாறு செய்ததன்மூலம் தானும் இயேசுவின் சீடன் என்பதை உறுதிசெய்கிறார். பவுலடியார், தான் ஒரு சீடர், திருத்தூதர் என்பதற்கு ஆணித்தரமான சான்றாக, ‘நானும் உயிர்த்த இயேசுவைக் கண்டேன்’ என்பதையே சான்றாக்குகிறார்.(வாசிக்க 1 கொரி 15:8) ஆகவே தான் ஆண்டவரைக் கண்டதில் பெருமை கொள்கிறார். தானும் ஒரு சீடர் என்பதில் பெருமைகொள்கிறார். ஆகவே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியிலும் எந்த குறையும் வைக்காமல் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்.

இயேசுவின் செயல்பாட்டைத் தங்கள் வாழ்வில் கண்ட எவரும் அவருக்குச் சாட்சியம் பகராமல் பின் வாங்கமாட்டார்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் இயேசுவைக் காணாமல் இருக்க முடியாது. பல சமயங்களில் அருகில் இருக்கும் ஆண்டவனை அடையாளம் தெறியாது இருக்கிறோம். இதயக் கதவைத் திறந்து நம் வாழ்வில் அருஞ்செயல்புரியும் ஆண்டவனைக் காண்போம். வாழ்க்கை ரசிக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

~ அருட்திரு ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: