நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. எபிரேயர் 13 : 5

வானத்தையும்,பூமியையும் உண்டாக்கிய ஆண்டவர் உங்கள் ஒவ்வொரு வருடனும் கூடவே இருந்து உங்கள் உள்ளத்தில் பேசிக்கொண்டு ஒவ்வொரு நொடிப்பொழுதும் செயலாற்றிக்கொண்டு
தான் இருக்கிறார்.அவர் ஒருபோதும் அவரை நோக்கி கூப்பிடுகிறவர்களை விட்டுவிலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. அதனால் உங்களுக்கு எந்த ஒரு தேவை இருந்தாலும் அவரையே நோக்கிப்பார்த்து கூப்பிடுங்கள்.அப்பொழுது உங்களுக்கு செவிசாய்ப்பார்.

நான் ஆண்டவரை அறிந்தக் காலத்தில் எனக்கு வாக்குத்தத்தமாக இந்த வசனத்தை தான் கொடுத்தார். அப்பொழுது எனக்கு வேதத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாததால் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. அதனால் பத்து வருஷம் வேதத்தை வாசிக்கவில்லை.ஆனால் நான் மறந்தாலும் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. ஏனெனில் 10 வருஷம்கழித்து எனக்கு ஒரு சோதனையைக் கொடுத்து மறுபடியும் அதே வசனத்தை திரும்பக்கொடுத்து எனக்கு ஞாபகத்தைக் கொடுத்தார். அந்த சோதனையால் பல அவமானங்களை சந்தித்தேன். ஏனெனில் ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாத சோதனை அது, நான் செய்யாத தவறுக்கு என்மேல் கொலைப்பழி சுமத்தி என்னை சிறையில் அடைக்கப்பார்த்தார்கள். ஆண்டவரை மறந்திருந்த நான் அப்பொழுது திகைத்து நின்றேன்.

ஆனால் ஆண்டவர் என்னை மறக்கவேயில்லை. மறுபடியும் அந்த வசனத்தை எனக்கு ஞாபகப்படுத்தி எனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்கள் ஒருவரும் இல்லாதபடிக்கு செய்து அந்த வீண் பழியில் இருந்து காத்து சுமார் 20 வருஷங்களாக என்னைப் பாதுக்காத்து என் தேவைகள் யாவையும் சந்தித்து ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிறார். ஒருவேளை அந்த சோதனையில் நான் சிக்காமல் இருந்திருந்தால் ஆண்டவரை விட்டு விலகி இந்த உலகப் பிரகாரமாக வாழ்ந்திருப்பேன். அப்பொழுது அது எனக்கு அவமானமாக இருந்தாலும் இப்பொழுது சந்தோஷப்படுகிறேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் அவர் வாக்கு கொடுத்தால் கொடுத்ததுதான். நாம் பின் வாங்கிப்போனாலும் அவர் ஒருபோதும் கைவிடவே மாட்டார். அவருடைய நாமம் மகிமைப்படவே இதை சொல்கிறேன்.

அன்பானவர்களே! சிலநேரங்களில் நம்மை மறுபடியும் அவருடனே சேர்த்துக்கொள்ளும்படி சில சோதனைகள் வரலாம். ஆனால் நீங்கள் சோர்ந்து போகாதீர்கள்.எனக்கு உதவிச் செய்த ஆண்டவர் உங்களுக்கும் உதவிச் செய்வார். அவரிடத்தில் பட்சபாதம் இல்லை. ஆள்பார்த்து செயல்படுபவரும் இல்லை. மனிதர்கள் உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். ஆனால் யாவரையும் உருவாக்கிய ஆண்டவர் ஒவ்வொருவரின் இதயத்தை பார்க்கிறார். அவரவர் செய்கைக்கு தக்க பலனை நிச்சயம் அருள் செய்வார். ஒருவரையும் விட்டு விலகுவும் மாட்டார். ஒருவரையும் கைவிடவும் மாட்டார்.

அன்பின் இறைவா!!

நீர் மாறாதவர்,வானம்,பூமி,ஒழிந்து போனாலும் உம்முடைய வார்த்தை ஒருபோதும் ஒழிந்துப் போவதில்லை. உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை என்று வாக்களித்த இறைவன் அவ்வாறே செயலாற்றிக்கொண்டு வருவதற்காய் உமக்கு கோடி நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம் உமக்கு பயந்து, உமது கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க ஒவ்வொருவரையும் போதித்து வழிநடத்தி காத்தருளும். அவரவர் தேவையை சந்தித்து ஆசீர்வதித்து காத்தருளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபத்தை உம்மண்டை வைக்கிறேன் நல்ல பிதாவே!

ஆமென்! அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: