நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் !

பார்வையற்ற மனிதன் பர்த்திமேயு ஒரு விவிலியக் கதாநாயகன். அவர் இயேசுவிடமிருந்து பார்வை பெற்ற பாணியே ஒரு வித்தியாசமான பாணிதான். அவருடைய தனித்தன்மை பின்வரும் வழிகளில் வெளிப்படுகிறது: 1. பார்வையற்ற அவர் நம்பிக்கை இழந்து, விரக்தியுடன் வாழவில்லை. நம்பிக்கை நிறைந்த ஒரு மனிதராக இருந்தார். எனவேதான், இயேசு அவ்வழியே போகிறார் என்று அறிந்ததும், கத்தி வேண்டினார். 2. பிற மனிதர்கள் அவரைப் பேசாதிருக்குமாறு அதட்டியும்கூட, என்மீது இரங்கும் என்று இன்னும் உரக்கக் கத்தினார். 3. பின்னர், தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார் என்று எழுதியுள்ளார் நற்செய்தியாளர். 4. இயேசு அவருடைய விருப்பத்தை வினவியபோது, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்று தம் விருப்பத்தை அறிக்கையிட்டார். 5. இறுதியாக, இயேசு நீர் போகலாம் என்று அவரைப் பார்வையுடன் அனுப்பியபோது, அவர் இயேசுவைப் பின்பற்றி, அவருடன் வழி நடந்தார் என்று முடிகிறது இக்கதாநாயகனின் கதை.

பர்த்திமேயுவிடமிருந்து இந்த ஐந்து பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம். 1. வாழ்வில் நாம் எதையும் இழக்கலாம். ஆனால், நம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. 2. இயேசுவின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு அவரிடம் விடாது மன்றாட வேண்டாம். 3. நமது இறைநம்பிக்கை பயனற்றது என்று பிறர் நம்மைச் சோர்ந்துபோக வைத்தாலும்கூட, இன்னும் அதிக நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும். 4. நாம் மீண்டும் பார்வை அடைய வேண்டும் என்னும் கருத்துக்காக இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டும். 5. இயேசுவின் அருள்கரத்தால் தொடப்பட்ட பின், இயேசுவை வாழ்நாள் முழுவதும் பின்தொடரவேண்டும். விவிலிய நாயகன் பர்த்திமேயுவிடமிருந்து இந்த வரத்தை நாம் பெற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்:

வாழ்வின் நிறைவே இறைவா, வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும், உம்மோடு உரையாடி அதன் வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் தூய ஆவியின் ஞானத்தை நிறைவாகத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: