நாம் ஆண்டவர்மேல் வைக்கும் விசுவாசம் நீதியாக எண்ணப்படும்.

கர்த்தருக்குள் அன்பானவர்களுக்கு நம்முடைய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் நமது முழு நம்பிக்கையையும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேலேயே வைத்து நமது நம்பிக்கையில் நிலைத்திருப்போம். நாம் எந்த ஒரு செயலையும் செய்யாவிட்டாலும் நமது ஆண்டவர்மேல் முழு நம்பிக்கையும் வைத்து காத்திருந்தோமானால் அந்த நம்பிக்கையின் பொருட்டு நம்மை நீதியுள்ளவர்களாக கடவுள் நினைப்பார். ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். அதை கடவுள் அவருக்கு நீதியாக கருதினார். அதாவது எந்த ஒரு சூழ்நிலையிலும் இது முடியவே முடியாது என்று நினைக்கும் ஒரு காரியத்தில் நிச்சயமாக கடவுளால் முடியும் என்று நம்பிக்கையில் உறுதிப்பட்டால் அப்பொழுது அந்த நம்முடைய நம்பிக்கையின் பொருட்டு கடவுள் அதை நிறைவேற்றி தருவார். ஏனெனில் நம்பிக்கை அத்தனை பெலம் வாய்ந்தது. இதைத்தான் உரோமையர் 4:5 ல் இவ்வாறு வாசிக்கிறோம். தம் செயல்கள்மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்றில்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை வைப்போரையும், அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர் எனக் கருதுகிறார்.

கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என கருதப்படுவர். நம்மிடத்தில் எதையும் எதிர்பாராமல் நம்மை அன்பு செய்ததால் அதை நம்பவேண்டும் என்று விரும்புகிறார். கடவுள் மனிதரை தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும், தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது. இறைவாக்குகளும், திருச்சட்டமும், இதற்கு சான்று பகிர்கின்றன. இயேசுகிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாக கடவுள் மனிதரை தமக்கு ஏற்புடையவராக்குகிறார் நம்பிக்கை கொள்ளும் அனைவரையும் அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. ஏனெனில் நாம் எல்லோருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து விட்டோம்.

ஆனாலும் இயேசுகிறிஸ்து நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர் என ஆக்கப்படுகிறோம். அவருடைய இரத்தம் நம்மை மீட்கும் என நம்பிக்கை கொண்டால் நம்முடைய பாவங்கள், சாபங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு நீதியுள்ளவர்களாக மாறுவோம். அவரை உறுதியாய் நம்பினோரை ஆண்டவர் கைவிடவே மாட்டார். அவர்மேல் உள்ள நம்பிக்கையில் உறுதி வேண்டும்.அப்பொழுது நாம் நினைத்தே பார்த்திராத பெரிய காரியங்களும், அதிசயங்களும், அற்புதங்களும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும்.உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதை உடையவன் உம்மையே நம்பியிருந்தால் அவனை பூரன சமாதானத்துடன் காத்துக்கொள்ள வல்லவராய் இருக்கிறார்.

ஜெபம்

நம்பிக்கையின் தேவனே உம்மை துதிக்கிறோம், உம்மேல் உள்ள நம்பிக்கையில் நாங்கள் சிறிதளவும் குறையாத படிக்கு எங்கள் நம்பிக்கையை பெருகச் செய்யும். எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் பாவங்களை மறந்து,நாங்கள் செய்த எல்லா தீச்செயலையும் உமது கருத்தில் கொள்ளாதபடிக்கு அவைகளை விலக்கி, காத்து இரட்சித்தருளும். எந்த சூழ்நிலையையும் பார்த்து கலங்காமல் உம்மேல் வைக்கும் நம்பிக்கை அவைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுவிக்கும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையை அளித்தருளும். எல்லா சூழ்நிலையையும் மாற்றி அமைக்கும் தேனாய் இருக்கிறீர். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டி நிற்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பரம தந்தையே!! ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: