நாம் ஆராதிக்கும் தேவன்,நம்மை தப்புவிக்க வல்லவர்.

கிறிஸ்துவுக்குள் அன்பான இறைமக்களுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இன்றும் கூட அநேக மக்கள் ஒவ்வொருவரும் தமது தேவைகளை நிறைவேற்ற பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறோம். அந்த தேவைகளை பெற்றுக்கொள்ள பல பாடுகளை அனுபவிக்கிறோம். ஆனால் நம் ஆண்டவராகிய தேவன் நம்முடைய எல்லா தேவைகளையும் அறிந்து இருக்கிறார். அவரை நோக்கி பார்த்து நமது மன விருப்பங்களை அவரிடத்தில் ஒப்புவித்து நம் எல்லா தேவைகளையும் பெற்றுக்கொள்வோம்.

சில வேளைகளில் நாம் கடவுளின் மகிமையை உணராமல் புலம்பி .தவிக்கிறோம். சரீரத்தின்படி நாம் கடவுளிடம் இருந்து தூரமாய் இருந்தாலும் ஆவியின்படி நாம் அவரோடு இணைந்திருக்கிறோம். ஆவியானவர் எப்பொழுதும் நம்மோடு கூடவே இருந்து நமக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்து கொண்டுதான் இருக்கிறார்.அவருக்குள் வேர் கொண்டு நிலைத்திருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய தேவையில்லை.

எழுதியிருக்கிறபடி  [மறைநூலில்] கடவுள் அவர்மேல் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் உண்டாக்கி வைத்திருக்கும் ஆசீர்வாதங் களை நமது கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை,நம் இருதயத்தில் உணருவுமில்லை என்று 1 கொரிந்தியர் 2:9 ல் வாசிக்கிறோம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நாம் உணராமல் இருக்கிற காரணம் என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் விவிலியத்தை நன்கு வாசித்து அதன் மதிப்பை உணர்ந்துக்கொள்ளுங்கள். நம்மை தானியேலைப் போல சிங்க குகையிலே போட்டாலும் சரி, அவரின் நண்பர்களை அக்கினி சூலையில் போட்டது போல போட்டாலும் சரி நாம் எதற்கும் கலங்காமல்,பயப்படாமல் நாம் ஆராதிக்கும் தேவனை நோக்கியே பார்ப்போம். அவர்களை எல்லாம் தப்புவித்த தேவன் நம்மையும் எல்லாவற்றிலும் இருந்து தப்புவிப்பார். நாம் நமது விசுவாசத்தை குறைக்காமல் உறுதியுடன் இருந்து நம் தேவனையே ஆராதிப்போம்.

ஜெபம்:
அன்பின் இறைவா! நீர் எங்களுக்காக வைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம், போற்றுகிறோம். எங்கள் தேவைகளை எல்லாம் அனுதினமும் நீர் அறிந்திருக்கிறீர். எங்கள் கண்களால் காணவும் இருதயத்தில் உணரவும் உதவி செய்யும். ஏனெனில் எங்களுக்கு என்று குறித்துள்ளதை நீர் நிறைவேற்றுவீர். அதுபோல இன்னும் அதிகமாயும் எங்களுக்காக வைத்திருக்கிறீர். நாங்கள் பொறுமையோடு உமது சமுகத்தில் காத்திருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள உதவி செய்தருளும். நாங்கள் ஆராதிக்கும் தேவன் நீர், எத்தனை மகிமையும், வல்லமையும் உடையவர் என்று கண்டிருக்கிறோம். ஆகையால் உம்மையே நோக்கி பார்த்து உமது கரத்தில் இருந்து பெற்றுக்கொண்டோம் என்று நம்புகிறோம். துதி,கனம்,மகிமை,யாவும் உம் ஒருவருக்கே!ஆமென் !! அல்லேலூயா!!!.

(Written by – Sara, MyGreatMaster.com

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.