நாம் கடவுளின் படைப்புக்கள்

கடவுளுக்கு நாம் அனைவரும் எந்த அளவுக்கு கடன்பட்டிருக்கிறோம், என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது. கடவுள் நமக்கு இந்த அழகான உலகத்தைத் தந்திருக்கிறார். இந்த உலகத்தில் வாழ நல்ல வாழ்வைத் தந்திருக்கிறார். இந்த உலகத்தில், நமது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ, தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவர் இல்லையென்றால், நாம் யாருமே இல்லை. அவர் தான் நமக்கு எல்லாமே. அப்படியிருக்கிறபோது, நாம் தான், அவருக்கு கடன்பட்டிருக்கிறவர்களாக இருக்கிறோம். நாம் பணிவிடை செய்வது தான், நியாயமானதாக இருக்க முடியும்.

பணிவிடை என்றால் என்ன? நாம் எப்படி பணிவிடை கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியும்? அதற்கு இயேசு இந்த உவமை வழியாக விளக்கம் கொடுக்கிறார். பணியாளர் என்பவர், தலைவருக்குச் சொந்தமானவர். அவர் ஒன்றைச் செய்கிறபோது, அதை அவர் செய்தாலும், அதனால் விளையக்கூடிய புகழும், பெருமையும் தலைவருக்கேச் சேரும். ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்த நபருக்குத்தான், அந்த இயந்திரத்தினால் விளையும் அனைத்தும் பெருமையும் சேரும். அதுபோலதத்தான், நாம் கடவுளின் படைப்பு. நாம் முழுக்க, முழுக்க கடவுளுக்குச் சொந்தம். நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்கள், அதனால் ஏற்படும் பயன்களுக்கு கடவுள் தான் போற்றுதற்குரியவர். அப்படிப்பட்ட மனநிலை தான், மனிதர்களுக்கு இருக்க வேண்டும், என்று இயேசு சொல்கிறார்.

இயேசு சொல்லக்கூடிய மனநிலை இந்த உலகத்தில் இருந்தால், இந்த உலகத்தில் யாரும் ஏழைகளாகவோ, கவலைப்பட்டுக் கொண்டோ, இருக்க வேண்டியதில்லை. மாறாக, இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவரும், இந்த உலகத்திற்கு நாங்கள் தான் அதிபதி, என்று நினைப்பதால் தான், இவ்வளவு பிரச்சனைகள் இந்த உலகத்தில், எழுந்து கொண்டிருக்கின்றன. கடவுளுக்கு நாம் சொந்தம், அவர் தான் இந்த உலகத்தின் அதிபதி என்பதை, நாம் மீண்டும் நமது எண்ணத்தில் வலியுறுத்துவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: