நாம் நமது ஆண்டவரின் மேல் நம்பிக்கையாயிருப்போம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் அநேக தொல்லைகளின் மத்தியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பாடுகள், கஷ்டங்கள் வருகிறது. ஆனால் அவைகளில் இருந்து தப்பிக்க நமக்கு விடுதலை அளிக்க நம் தேவன் நம் அருகில் நின்று நம்மை எல்லாத்தீங்குக்கும் விலக்கி காப்பாற்ற நமது அருகில் ஆவலாய் காத்திருக்கிறார். நாம் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அவரை நோக்கி பார்த்து அவரை கூப்பிட்டு அவரிடத்தில் நமது எல்லாத் தேவைகளையும் அறிக்கையிட்டு அவரின் சித்தப்படி நடந்தோமானால் நமது எல்லா தேவைகளையும் அவரே பொறுப்பெடுத்து நமது தேவைகள் யாவையும் பூர்த்தி செய்வார். நம்பிக்கையுடையவர்களே! இன்றே ஆண்டவரிடத்தில் வாருங்கள், அவர் இரட்டிப்பான ஆசீர்வாதங்களை தருவார்.

நாம் அவர்மேல் வைத்த நம்பிக்கை நம்மை ஒருபோதும் வெட்கப்படுத்தாது. ஆண்டவரின் தூய ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் இருந்து நாம் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நமக்கு போதிப்பார். அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தோமானால் நிச்சயம் நாம் நம்முடைய எல்லா ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வோம். ஆண்டவரின் மேல் உள்ள நம்பிக்கையால் மீட்கப்பட்டு உள்ளோம். அந்த நம்பிக்கையில் உறுதியாய் இருந்து கஷ்டங்களின் மத்தியிலும் ஆண்டவரை துதித்து பாடி சந்தோஷமாக இருந்தால் அந்த நம்பிக்கை நம்மை கண்டிப்பாக வெட்கப்படுத்தாது. நாம் காண வேண்டியதை நாம் நம்பவேண்டிய அவசியம் என்ன?நாம் காணாதவைகளையும் நம்பினால் ஆண்டவர் நம்மை ஒருபோதும் கைவிடவே மாட்டார். கஷ்டத்திலே பொறுமையாயும், ஜெபத்திலே உறுதியாயும் இருந்து அந்த ஒரே நம்பிக்கையில் அழைக்கப்பட்ட நாம் அந்த நம்பிக்கையில் நிலைத்திருப்போம்.

பிரியமானவர்களே! நாம் நம்முடைய நம்பிக்கையை இந்த உலகத்தின் செல்வத்தின் மீதோ, நம்முடைய இறுமாப்பான சிந்தனையிலும் வைக்காமல் நாம் அனுபவிக்க சகலவிதமான நன்மைகளையும் நமக்கு சம்பூரணமாக கொடுக்கும் ஜீவனுள்ள தேவன் மேல் வைத்து நம்முடைய பக்தியை கடவுளுக்குள் இன்னும் வளர்த்து சத்தியத்தை அறிகிற அறிவில் தேறினவர்களாய் வாழ்ந்து நமது நம்பிக்கையில் என்றென்றும் நிலைத்திருந்து ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்.

ஜெபம்

அன்பின் தேவனே! எங்களை மீட்க வந்தவரே, உமது இரத்தத்தால் எங்களை மீட்டு காப்பவரே உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் விரும்பும்படி உமது மேலேயே நம்பிக்கை வைத்து உம்மிடத்தில் இருந்து ஆசீரை பெற்றுக்கொள்கிறோம். எங்கள் எல்லாத் தேவைகளையும் நீர் அறிந்துள்ளீர். அனுதினமும் நாங்கள் உமக்கு விரோதமாக பாவம் செய்திருந்தாலும் எங்கள் பாவங்களை மன்னித்து எங்கள் குற்றம், குறைகளை நீக்கி உம்மைப்போல் வாழ்ந்து யாவரிடமும்
அன்போடும், பாசத்தோடும் நடந்து உமக்கே மகிமை சேர்க்க உதவி செய்யும். எங்கள் நம்பிக்கையில் மன உறுதியோடு இருந்து உம்மை போற்றி துதிக்கிறோம். துதி,கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே! ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: