நினிவே மக்களின் எடுத்துக்காட்டு !

“தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!” என்னும் இயேசுவின் ஆதங்கத்தை இன்றைய அறைகூவலாக எடுத்துக்கொள்வோம்.

நினிவே மக்கள் பேறு பெற்றவர்கள். காரணம், இறைவாக்கினர் யோனாவையும், அவரது செய்தியையும் ஏற்றுக்கொண்டார்கள். மனம் மாறினார்கள், தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள். எனவே, இறைவனும் அவர்கள்மீது இரக்கம் காட்டினார்.

ஆனால், இயேசுவின் காலத்துப் பரிசேயர், சதுசேயர், பல யூதர்கள் இயேசுவையும், அ வரது போதனையையும் புறக்கணித்தார்கள். இயேசுவைக் கொல்ல முன்வந்தார்கள். எனவே, இறைவனின் இரக்கத்தைப் பெற இயலவில்லை. நினிவே நகர மக்கள் அவர்களைப் பார்த்து நகைப்பார்கள், கண்டனம் செய்வார்கள்.

நாம் எப்படி? இறைவார்த்தையை நாள்தோறும் வாசிக்கிறோம், தியானிக்கிறோம், செபிக்கிறோம். ஆனால், நம் வாழ்வு மனம் மாறியவர்களுக்குரிய வாழ்வாக இருக்கின்றதா? இல்லை, பார்த்தும், பார்த்தும் பாராமலும், கேட்டும், கேட்டும் கேளாமலும், மனம் மாறாமலும் இருக்கின்றோமா? நினிவே மக்கள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்வர், கண்டனமும் செய்வர்.

மன்றாடுவோம்:

உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம் காலத்தைய யூதர்களைப் போல அல்லாது நினிவே நகர மக்களைப் போல இந்தத் தவக்காலத்தில் உமது செய்தியை ஏற்று, மனந்திரும்பியவர்களாய் வாழ அருரும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

– பணி குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: