நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் ஆண்டவரிடமே உள்ளது

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

அன்பானவர்களே! வாழ்வு தரும் உணவாக வந்த நம் ஆண்டவர் அவரையே தியாகப்பழியாக நமக்கு கொடுத்து நம்மை இந்த உலகத்தில் வாழும் நிலையில்லாத வாழ்விலிருந்து மீட்டு என்றென்றும் அவரோடு கூடவே வாழும் நிலையான வாழ்வை நாம் பெற்றிட இந்த பூமிக்கு இறங்கி வந்து நம்முடைய கவலைகள்,கஷ்டங்கள் யாவையும் நாம் மறந்து அவரோடு சந்தோஷமாக இருக்கும்படி தம் உடலாகிய மன்னாவை நற்கருணை வாயிலாக நமக்கு அளித்து,அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற்றுக்கொள்ள வேண்டுமாய் தமது பிதாவின் திருவுளத்தை அப்படியே நிறைவேற்றி இன்றுவரை நம்மை வழிநடத்தி வந்திருக்கிறார். இனிமேலும் வழிநடத்துவார்.

நற்கருணை என்பதை ஒரே வரியில் சொல்வோமானால் அது ஆண்டவரின் உயிருள்ள பிரசன்னம் என்று சொல்லலாம். அதை வாழ்வுதரும் உணவாக புசிக்கும் நாம் எல்லாவற்றிலும் அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்து நம்முடைய செயல்கள் யாவும் கடவுளுக்கு ஏற்றவையாக இருக்கும்படி நடந்துக்கொள்ள வேண்டும். கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல் ஆகும். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு இயேசுவே! இந்த உணவை எவராவது உண்டால் அவர்கள் என்றுமே வாழ்வார். அவரின் சதையை உண்டு,அவரின் இரத்தத்தை குடிக்கும் நாம் அவர் சொற்படி நடப்பதே நாம் அவருக்கு செலுத்தும் தியாககப்பலி ஆகும்.

இயேசுகிறிஸ்துவின் உடலை உண்ணும் நாம் அவருடைய எல்லா கற்பனைகளையும், கட்டளைகளையும் கடைப்பிடித்து நடந்து நம்மை வெறுத்து நமது சிலுவையை அனுதினமும் அவர் பின்னால் சுமக்க வேண்டும்.அவரின் அன்பிலே நடக்க வேண்டும். நம்முடைய முழு இருதயத்தோடும் அவரில் அன்புக் கூர்ந்து,நம்மை அடுத்திருப்போரையும் அன்பு செய்து நடந்தால் நாம் முழு திருச்சட்டத்தையும் நிறைவேற்றுபவர்களாக வாழலாம். அப்பொழுது ஆண்டவர் நமக்கு
என்றென்றும் அவரோடு இருக்கும் நிலைவாழ்வை அளித்திடுவார்.

உலகின் ஒளி அவரே. அவரை பின்தொடர்ந்து நடப்பவர் இருளில் நடக்க மாட்டார்கள்.அவரிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் ஒருவரையும் அவர் கைவிடாமல் காத்திடுவார். அவரைப்போல் நாமும் மனத்தாழ்மையுடன் நடந்துக் கொள்வோம்.ஆண்டவரும் போதகருமான அவரே தம்முடையே சீடர்களின் கால்களை கழுவினார் என்றால் நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நம்முடைய வாழ்க்கையில் புரிந்து செயல்படுவோம்.

ஆண்டவர் நம்மிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்புக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவரின் கட்டளையை கடைப்பிடிப்போம். நம்முடைய நண்பர்களுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட சிறந்த அன்பு வேறு எதுவும் இல்லை. அதைத்தான் நம்முடைய ஆண்டவரும் நமக்காக செயலாற்றி நம்மை மீட்டுள்ளார். நாமும் அவர் கட்டளை இடுவதையெல்லாம் செய்து அவரின் நண்பர்களாய் மாறுவோம். அப்பொழுது ஆண்டவர் நம்மை பணியாளர் என்று சொல்லமாட்டார். ஏனெனில் ஒரு தலைவர் செய்
வது பணியாளருக்கு தெரியாது.நண்பருக்கு மட்டுமே தெரியும். நாம் ஆண்டவரை தெரிந்துக்கொள்ளவில்லை அவரே நம்மை தெரிந்துக்கொண்டார். ஆகையால் நாமும் அவரைப் போல் மாறி கனி தரவும், அந்த கனி தரும் வாழ்வில் நிலைத்திருக்கவும் நமக்கு அருள்புரிவார். நாம் ஒவ்வொருவரும் அனுதினமும் வேதத்தை வாசித்து ஆண்டரின் வார்த்தைகளை உணவாக புசித்து தியானித்து ஜெபித்து, நிலைவாழ்வை பெற்று வாழ்ந்து மகிழ்ந்திருப்போம்.

ஜெபம்

அன்பே உருவான தந்தையே, எங்களுக்காக உமது ஒரே மகனை தியாகப்பழியாக கொடுத்து எங்களை மீட்டுக்கொண்டவரே உமக்கு நன்றி சொல்கிறோம். உம்மைப்போல் நாங்களும் வாழ்ந்து உமது அடிச்சுவட்டை பின்பற்றி உமது வார்த்தைகளை எங்கள் இதயத்தில் பதித்து அதன்படியே வாழ்ந்து உமக்கே மகிமை உண்டு பண்ண உதவி செய்யும். எங்களை தேடி வந்து மீட்ட தெய்வமே நீர் விரும்பும்படிவாழ கற்றுத்தாரும். எங்கள் முழு இதயத்தோடு உம்மையே நேசித்து பிறரையும் நேசித்து உமது கட்டளைகள் யாவையும் கடைப்பிடித்து நடக்க போதித்தருளும்.நீர் தரும் நித்திய வாழ்வை நாங்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள அருள்புரியும்.மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் அன்பின்தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: