நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்!

பாலை நிலத்தில் திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் என்று ஆலோசனை கூறிய சீடருக்கு இயேசு தந்த இந்தப் பதில் மொழி அவர்களுக்கு நிச்சயம் வியப்பைத் தந்தது. எனவேதான், எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதில் கொடுத்தனர்.

நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் இயேசுவின் கட்டளை சீடருக்கும், நமக்கும் இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது;

  1. பரிவின் வெளிப்பாடாக பகிர்வு அமைய வேண்டும். இயேசு திரளாகக் கூடியிருந்த மக்கள்மீது பரிவு கொண்டார். நோயுற்றோரைக் குணமாக்கினார், ஆறுதல் நிறைந்த வார்த்தைகளைப் போதித்தார். அத்துடன் அவரது பரிவு நிறைவுபெற்றுவிடவில்லை. அவர்களின் வயிற்றுப் பசியையும் போக்கவேண்டும் என்று விரும்பினார். இந்த மனநிலையைத் தம் சீடருக்கும் கற்றுக்கொடுக்கிறார். உங்கள் பரிவு சொற்களில் மட்டுமல்ல, செயலிலும் இருக்கட்டும். குறிப்பாக, உணவு, உடை, உறைவிடம் இன்றித் தவிப்போருக்கு உதவுங்கள். அதுவும் உங்கள் பணியே என்று அறிவுறுத்துகிறார்.
  2. உங்களிடம் என்ன இல்லை என்று பார்ப்பதைவிட என்ன இருக்கிறது என்று பார்க்கப் பணிக்கின்றார் இயேசு. என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு அற்புதங்களைச் செய்ய வல்லவர் இறைவன் என்று கற்றுத் தருகிறார். எனவே, என்ன செய்யலாம் என்று மலைக்காமல், என்ன இருக்கிறதோ அதை இறைவன் கையில் தந்தால், அவர் வியப்புக்குரிய வகையில் அதைப் பலுகச் செய்வார்.

மன்றாடுவோம்; அன்பின்; திருவுருவே இயேசுவே, நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்னும் உமது கட்டளைக்காக இன்று நன்றி செலுத்துகிறோம். எங்களோடு வாழும் இல்லாதவர்களுக்கு உணவும், மாண்பும் வழங்கும் பொறுப்பை நீர் எங்களுக்கே தந்திருக்கிறீர். இந்தப் பொறுப்பை உணர்ந்து எங்களிடம் என்ன உள்ளதோ – செல்வம், ஆற்றல்கள், திறமைகள், நேரம் – அதை உமது பாதங்களில் ஒப்புக்கொடுக்கும் தாராள மனத்தை எங்களுக்குத் தாரும். அவ்வாறு நாங்கள் செய்தால், நீர்; அற்புதங்களைச் செய்ய வல்லவர் என்ற விசுவாசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருட்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: