நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்

திருப்பாடல் 148: 1 – 2, 11 – 12, 13, 14
”நீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்”

மனிதன் யார்? என்கிற கேள்விக்கு பலவிதமான பதில்களை நாம் கேட்டிருக்கலாம். இன்றைய திருப்பாடல் மனிதன் யார்? மனிதன் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான்? என்பதற்கான பதிலை, மிகத்தெளிவாக நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் என்பதையும், மனிதனை கடவுள் படைத்தது அவரைப்போற்றுவதற்கும், புகழ்வதற்குமே என்பதையும் இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இயற்கையோடு இணைந்து கடவுளை மனிதன் போற்ற வேண்டும் என்பதுதான், மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமாக இருக்கிறது.

கடவுளை மனிதர்கள் அனைவருமே போற்ற வேண்டும். மனிதர்களில் பல வேறுபாடுகளை இந்த சமுதாயம் ஏற்படுத்தியிருக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை என்று பலவிதமான வேறுபாடுகளை இந்த உலகம் நமக்குக் கற்பித்திருக்கிறது. சாதாரண மக்கள் தான் கடவுளைப் போற்ற வேண்டும் என்றும், மற்றவர்கள் எல்லாமே பெற்றிருப்பதனால், அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், மனிதர்களில் ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லாருமே கடவுளைப் போற்ற வேண்டும். எல்லாருமே கடவுளை தங்களது முழுமுதல் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாருமே கடவுள் தங்களுக்கு செய்திருக்கிற நன்மைகளை மறக்காமல் நினைவில் வைத்து, நன்றிக்குரியவர்களாக இறைவனைப் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, கடவுள் மனிதனைப் படைத்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.

கடவுளின் படைப்புக்களாக இருக்கிற நாம், படைப்பின் உயர்ந்த சிகரமாக இருக்கிற நாம், எப்போதும் கடவுள்பால் நமது உள்ளத்தை வைத்திருக்க வேண்டும். கடவுளைவிட்டு விலகாமல், கடவுளைப் போற்றிப்புகழ்வதை நம்முடைய வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: