நேர்மறையான பார்வை

மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துயரங்களையும், கவலைகளையும் தான், பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கிறோமே தவிர, அது நமக்கு தரும் பல இலாபங்களை, வாழ்க்கைப் படிப்பினைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இது எதிர்மறையாக சிந்திக்கக்கூடிய சிந்தனையின் விளைவு. நடப்பது கெட்டதாக இருந்தாலும், அதை நோ்மறையாக சிந்தித்தால், நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக வாழலாம். அது கடினமாக இருந்தாலும், அப்படி வாழ நாம் எடுக்கக்கூடிய முயற்சி, நமக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27) சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். இது எதிர்மறையாக சிந்தித்தன் விளைவு. இயேசு தான் பாடுகள் படப்போவதை அறிவிக்கிறார். நிச்சயம் இது சீடர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி கொள்வதற்கும் செய்தி இருக்கிறது. இயேசு தான் உயிர்த்தெழப்போவதையும் அறிவிக்கிறார். மொத்தத்தில் இயேசுவின் வார்த்தைகளை நேர்மறையாக எடுத்திருந்தால், அது நமக்கு வாழ்வு தரக்கூடிய, ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய செய்தி. அதை எதிர்மறையாகப் பார்த்தால், கவலை தரக்கூடிய செய்தி. சீடர்கள் அதனை எதிர்மறையாகப் பார்த்தனர். எனவே, கவலை கொள்கின்றனர்.

நமது வாழ்வில் நாம் எப்படி, நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். எல்லாவிதமான துன்பத்திலும் நிச்சயம் ஏதோ ஒன்று, நமக்குத் தேவையானது ஒன்று ஒளிந்திருக்கும். நாம் அதனை முன்னிறுத்தி, துன்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வாழ்வை நேர்மறையாகப் பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: