பகைவரை அன்பு செய்வோம்

பகைவர்களை அன்பு செய்வது என்கிற சிந்தனையின் பொருள் பற்றி பல்வேறு விவாதங்கள், சந்தேகங்கள் அனைவரின் உள்ளத்திலும் எழுவது இயல்பு. அன்பு என்பதற்கு கிரேக்க மொழியில் பல அர்த்தங்கள் தரப்படுகிறது. பகைவருக்கு அன்பு என்பதன் பொருள், உள்ளத்திலிருந்து சுரக்கின்ற இரக்கம், நன்மைத்தனம். அதாவது, அடுத்தவர் எனக்கு என்ன தீங்கு இழைத்தாலும் பரவாயில்லை, நான் அவர்களின் நலம் மட்டுமே நாடுவேன் என்கிற உணர்வுதான் பகைவருக்கு காட்டுகின்ற அன்பு.

நமது பெற்றோரை அன்பு செய்வது போலவோ, நமது உடன்பிறந்தவர்களை அன்பு செய்வது போலவோ, நமது உறவினர்களை அன்பு செய்வதுபோலவோ நாம் நமது பகைவரை அன்பு செய்ய முடியாது. இதுதான் உண்மை. நமது பெற்றோரை அன்பு செய்வதைப்போல நான் எனது பகைவரை அன்பு செய்யவே முடியாது. இது இயல்பானது. ஆனால், நமது பகைவரின் நலனை நாம் எப்போதும் நாட முடியும். நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்தலாம், நமக்கு தீங்கு செய்யலாம், நமது பெயரைக்கெடுக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, அவர்களின் நலன் நாடுவது, அவர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பது, அவர்கள் செய்வதைப்பொறுத்துக்கொள்வது, அவர்களுக்காக செபிப்பது, அவர்களிடத்தில் இரக்கம் காட்டுவது பகைவரிடம் காட்டுகின்ற அன்பாக இருக்கிறது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாததும், ஏற்றுக்கொள்வதும் அவர்களைச்சார்ந்தது. ஆனால், நான் எத்தகைய நேரத்திலும் அவர்கள் மீது வெறுப்பு காட்ட மாட்டேன் என்கிற எண்ணம் தான் பகைவர்களுக்கு காட்டும் அன்பு.

நம் வாழ்வில் வெறுப்பு, கோபம், வைராக்கியம் நமது உணர்வுகளுக்குள்ளாக கலந்து விடக்கூடாது. நமது கோபமோ, வெறுப்போ, மாலையில் சூரியன் மறைவதற்குள்ளாக மறைந்துவிட வேண்டும். அதை நமது உணர்வுகளுக்குள்ளாக தேக்கிவைக்கக்கூடாது. அத்தகைய நிலைக்கு நம்மைப்பக்குவப்படுத்தி வாழ்வதே, உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: