பயன்தரக்கூடிய வாழ்க்கை

உலகிற்கு உப்பாக இருப்பதற்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். உப்பு உவர்ப்பற்று போனால், அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் இயேசு சொல்கிறார். உப்பு எப்போதுமே தனது உப்புத்தன்மையை இழப்பதில்லை. அப்படியென்றால், இயேசு என்ன அர்த்தத்தில் இங்கே சொல்கிறார்? பாலஸ்தீனத்தில் பொதுவாக சாதாரண ஏழை மக்களின் வீடுகளிலும், வீட்டிற்கு வெளியே ஓடுகள் பதித்த அடுப்புகள் காணப்படும். இந்த அடுப்பில் சூடு இருக்க தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, அடுப்பின் அடியில் ஓட்டிற்கு கீழே உப்பு கொட்டப்பட்டு, அதன் மேல்தான் ஓடுகள் பதிக்கப்படும். ஏனென்றால், உப்பு வெப்பத்தை அதிகநேரம் தக்கவைக்கும் தன்மையுடையது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த உப்பு, வெப்பத்தை தாங்கும் ஆற்றலை இழந்துவிடும். அப்போது, அது வெளியே எடுக்கப்பட்டு, கொட்டப்படும். இயேசு இந்த பிண்ணனியில், உப்பைப்பற்றிச்சொல்லியிருக்கலாம்.

“மிதிபடும்“ என்கிற வார்த்தைக்கும் ஓர் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. யூதநம்பிக்கையை கைவிட்டு, வேறு தெய்வத்தை வணங்கிவிட்டு, மீண்டும் தாய்மதத்திற்கு திரும்பும் யூதர்களுக்கு, மனம்மாறியதற்கு அடையாளமாக, சடங்கு பின்பற்றப்பட்டது. அதன்படி, தாய்மதத்திற்கு திரும்பிய யூதர், தொழுகைக்கூடத்தின் நுழைவாயிலில், மக்கள் நுழையும் வாயிலருகில், நெடுஞ்சாண்கிடையாக படுத்துக்கிடக்க வேண்டும். தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள் அவர் மீது மிதித்துச்செல்வர். அதனுடைய பொருள்: நம்பிக்கைக்குரிய வாழ்வை வாழ மறுத்த என்னை தண்டியுங்கள் என்பதாகும். இந்த பிண்ணனியில், இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கலாம்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை. மற்றவர்களின் வாழ்விற்கு, உப்புபோல சுவை தரக்கூடிய வாழ்க்கை. அப்படி வாழவில்லை என்றால், நமது வாழ்வால் பயன் ஒன்றுமில்லை. எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை வாழ்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: