பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28

தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு எடுத்துவிட்டு, சில நாட்கள் கழித்து, மீண்டும் தொடர்வோம். ஆனால், பவுலடியார் இவ்வளவு நடந்தபிறகும், அவருடைய உயிருக்கே ஆபத்து வந்தபோதிலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்த நிகழ்ச்சியை வெகுசாதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர் தொடர்ந்து தன்னுடைய பணியைச் செய்கிறார். கிறிஸ்துவை அறிவிக்கிறார்.

சாதாரண துன்பங்களைக் கண்டாலே, விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்குகிற மனிதர்கள் வாழுகிற உலகத்தில், பவுலடியார் நம்முடைய நம்பிக்கை வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கிறார். கடவுளிடமிருந்து அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. கடவுள் தனக்கு கொடுத்த பணியைச் செய்வதில் உறுதியாக இருக்கிறார். கடவுள் தனக்கு எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும், தனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றெல்லாம், அவர் நினைக்கவில்லை. இறைவனுடைய பணியைச் செய்வதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். நம்முடைய நம்பிக்கை வாழ்விலும் அத்தகைய உறுதியைப் பெற மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: