பாடுகளின் குருத்து ஞாயிறு

கடந்த வாரத்தில் தருமபுரி பேருந்து எரிப்பில் பலியான மூன்று கல்லூரி மாணவிகள் கோகுலவாணி, ஹேமலதா மற்றும் காயத்ரி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது, தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை எல்லாருமே எதிர்க்கிறோம். ஏனென்றால், கடவுள் கொடுத்த உயிரை, கடவுள் மட்டுமே எடுக்க உரிமை உண்டு. மரணதண்டனையும் ஒருவிதத்திலே கொலைதான். ஆனால், அந்த வழக்கு நடைபெற்ற விதம், அதிர்ச்சி அலைகளையும், நீதி செத்துவிட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. மூன்று குற்றவாளிகளும், தங்களின் கட்சித்தலைவிக்கு, நீதிமன்றம் தண்டனை கொடுத்தது என்பதற்காக, மாணவிகள் இருந்த பேருந்தை, வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தி, அவர்களை கொலை செய்தவர்கள். அவர்களின் தலைவி என்ன, ஏழை மக்களுக்காக போராடியா தண்டனை பெற்றார்? ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார். ஜனநாயக நாட்டில், தங்கள் எதிர்ப்பைக்காட்ட அவர்களுக்கு வேறு வழியே இல்லையா? அதற்கு மாணவிகள் பேருந்திற்குள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தும், தீ வைப்பார்களா? இவர்களுடைய பிள்ளை உள்ளே இருக்கிறபோதும், இதே உணர்ச்சியைத்தான் இந்த கயவர்கள் காட்டுவார்களா? உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை மீண்டும் சீராய்வு செய்ய, மூன்று பேரும் மனுபோட்டனர். இங்கு தான் பிரச்சனையே. அவர்களுக்காக வாதாடுகிறவர், அந்த கட்சித்தலைவியின் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக வாதாடும் பிரபல வக்கீல். தண்டனையை உறுதிப்படுத்த வாதங்களை எடுத்துரைக்க வேண்டிய தமிழக அரசு சார்பில் உள்ள அரசு வக்கீல் மெளனம். ஏன் அவர்களின் தலைவி தான், தமிழகத்தை ஆண்டு வருகிறார். இவர்கள் நீதிக்காக வாதாடுவார்களா? தங்கள் நியமனம் செய்த தங்கள் தலைவிக்காக வாதாடுவார்களா? எல்லோருக்கும் தெரியும். விளைவு, மனச்சாட்சி உள்ளவர்கள் இதயத்தை நடுங்க வைக்கக்கூடிய அளவுக்கு, நீதி சூறையாடப்படுகிறது. ”இது திட்டமிட்ட கொலை அல்ல. கூட்டத்தினருடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நேரத்தில் நடந்த தற்செயலான சம்பவமாகும். வன்முறையின் போது சுற்றி என்ன நடக்கிறது என்பதே அறியாத நிலையில் நடந்த தவறு. அந்த பஸ்ஸீக்கு தீவைப்பதன் மூலம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்கின் குற்றவாளிகள் மூவருமே கூட்டத்தினரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கருத வேண்டும் – இந்த வாதத்தை ஏற்று நீதிபதிகள் தண்டனையை குறைத்தனர்” (தி இந்து, சனி, மார்ச் 12, 2016).

நீதி மறுக்கப்பட்டிருக்கிற, அந்த கல்லூரி மாணவிகளை இழந்து தவிக்கும் அவருடைய பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் இந்த சமுதாயத்தில் நாம் என்ன சொல்ல முடியும்? நீதி வளைக்கப்படுவது இன்று நேற்றல்ல. மானுட சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்தே, அதிகாரவர்க்கத்தினருக்கு ஒரு நீதியும், உழைக்கும்வர்க்கத்தினருக்கு ஒரு நீதியும் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அநீதியை உணராது அறியாமையில் இந்த உழைக்கும்வர்க்கத்தினர் இருப்பது வேதனையிலும் வேதனை. இந்த சமுதாயத்தின் அநீதிக்கு பலியானவர்களில் இயேசுவும் ஒருவர். அவர் என்ன தவறு செய்தார்? நோயாளிகளை குணப்படுத்தியது தவறா? இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தது தவறா? சமுதாயத்தின் ஒரங்கட்டப்பட்ட மக்களுக்கு, நற்செய்தி அறிவித்தது, அவர்களுக்கும் இறையாட்சியில் பங்கு உண்டு என்பதை உறுதியிட்டுக் கூறியது தவறா? ஆனால் யாருக்காக அவர் போராடினாரோ, அவர்களே அங்கே இயேசுவுக்கு இழைக்கப்படுகிற அநீதியைக்கண்டு, வாய்மூடி மெளனிகளாக நிற்கின்றனர். காசு வாங்கி ”சிலுவையில் அறையும்” என்கிற கத்துகிற கூட்டத்தின் கூவல் விண்ணைப்பிளக்கிறது. பாசம் காட்டி, நேசத்தோடு அரவணைத்த மற்றொரு கூட்டம் நடப்பதை வேடிக்கைப்பார்க்கிறது. இங்கு குற்றம் நடக்க காரணமாக இருப்பது வேடிக்கைப்பார்க்க வந்த கூட்டம். அவர்கள் நினைத்திருந்தால், ஒரு நிமிடத்தில் இயேசுவை விடுவித்திருக்கலாம். ஆனால், அறியாமை அவர்களின் கண்களை மறைக்கிறது.

இன்றைக்கு அறியாமை என்னும் இருளில் இருக்கும், அரசியல் அறிவே அடிப்படையில் இல்லாமல் மக்களை, நடப்பது என்னவென்றே தெரியாமல் அதிகாரவர்க்கத்தினரின் அடிமைத்தனத்திற்கு பலியாகிக்கொண்டிருக்கும் பொதுமக்களை விழிப்புணர்வு அடையச்செய்வது, அரசியல் அறிவு பெற்றிருக்கிற அனைவரின் கடமையாகும். அதனை பல தளங்களில், நாம் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப கற்றுக்கொடுப்பதும், இறையாட்சியின் விழுமியங்களில் ஒன்று தான்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: