பின்பற்றுவேன், ஆனால்… !

இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவித்த மூன்று மனிதர்களைப் பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். இவர்கள் மூவரும் நம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார்.

எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்புவோர் அனைத்திற்கும் மேலாக இயேசுவையே முதற் கடமையாகக் கருதவேண்டும். மற்ற கடமைகளையெல்லாம் அவரே பார்த்துக்கொள்வார். இதுவே நமது நம்பிக்கை. இதுவே பலரின் அனுபவம்.

மன்றாடுவோம்: சீடர்களின் முழு அர்ப்பணத்தையும எதிர்பார்க்கும் இயேசுவே, என்னுடைய அரைகுறை அர்ப்பணத்தை எண்ணி வெட்கி, மன்னிப்பு கோருகிறேன். அனைத்திற்கும் மேலாக உம்மைத் தேடவும், உமக்கே பணிபுரியவும், உம்மை எல்லா வேளையிலும் பின்பற்றவும் எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

–அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: