புதிய ஆவியைப் பெற்றுக்கொள்வோம்

புரியாமைக்கு இரண்டு காரணங்களைச்சொல்லலாம்.
1. புரிகிற அளவுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமை. ஆனால், இது ஒன்றும் பெரிய குறை அல்ல. அதை மற்றவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப நாம் விளக்கிச்சொல்கின்றபோது புரிந்துகொள்வார்கள். 2. புரிய விரும்பாமை. புரிந்து கொள்வதற்கு அறிவிருந்தும், அதைக்கேட்காமல் வேண்டுமென்றே அதில் நாட்டம் இல்லாமல் இருக்கிற நிலை. நிக்கதேம் இந்த இரண்டாம் நிலையில் இருக்கிறார். நிக்கதேம் படித்தவர். உயர்குலத்தைச் சேர்ந்தவர். அறிவு மிகுந்தவர். கேட்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறன் படைத்தவர். இருந்தபோதிலும், இயேசு சொல்வதைப் புரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கிறார்.

புதுப்பிறப்பு என்கிற வார்த்தை நிக்கதேமுக்கு ஒன்றும் புதிதாக இருக்க முடியாது. ஏனெனில், அவர் மறைநூலை கரைத்துக்குடித்தவர். இறைவாக்கினர் எசேக்கியேல் தொடர்ச்சியாக புதிய இதயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார். எசேக்கியேல் 18: 31 “புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்”. மேலும், 36: 26 கூறுகிறது: “நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்”. இங்கே புதுப்பிறப்பு என்பது நமது பழைய வாழ்வை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்து தருகிற புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்வது. பழைய ஏற்பாட்டில் கடவுள் இறைவாக்கினர்கள் வாயிலாக முன்னறிவித்ததை, இயேசு வழியாக செயல்படுத்துகிறார். இயேசு தந்த இந்தப்புதிய வாழ்வை பலர் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்வை மாற்றி புதிய ஆவியையும், புதிய இதயத்தையும் பெற்றுக்கொண்டனர். ஆனால், படித்த, உயர்குலத்தைச்சேர்ந்த நிக்கதேமால், அதைப்புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் இருக்கிறார்.

கடவுள் தரும் அருளை, கேள்விக்கு உள்ளாக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏன்? எப்படி? என்ற கேள்விகளைக்கேட்டால், நம்மால் சரியான பதிலையும் பெற்றுக்கொள்ள முடியாது, சரியாகப்புரிந்து கொள்ளவும் முடியாது. நம்முடைய அறிவினால், ஆற்றலினால் கண்டுபிடித்து விடலாம் என்றால், நிக்கதேமைப்போல தவறாகத்தான் புரிந்துகொள்வோம். இறைஅருளை கேள்விக்குள்ளாக்காமல் பெற்றுக்கொள்ளும் ஆற்றல் வேண்டி மன்றாடுவோம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: