பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க!

மாற்கு 7:31-37

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 23ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

பேசுங்க.. பேசுங்க.. பேசிக்கிட்டே இருங்க! இயேசுவைப் பற்றி பேசுங்க. எங்கும் பேசுங்க.. எதிலும் பேசுங்க.. என்ற சிறப்பான அறிவிப்பு முழக்கத்துடன் வருகிறது பொதுக்காலம் 23ம் ஞாயிறு.

நடிகர் குமரிமுத்துவின் பேட்டியை நான் அண்மையிலே பார்த்தேன். பார்த்தவன் பிரமித்து போனேன். அவர் தன் பேட்டியில் சொன்னதாவது, “நான் கிறிஸ்தவ சயமத்திற்குள் 1968ல் நுழைந்தேன். நுழைந்த அந்த தருணத்திலிருந்து மாற்றம் கண்டேன். ஆரம்ப காலத்தில் என் வாழிடம் என்பது பிளாட்பார்ம் தான். போதிய வசதி இல்லை. வறுமையில் வாடினேன்.

ஆனால் என் ஆண்டவரைக் கண்ட பொழுதிலிருந்து நான் உயர்த்தப்பட்டேன். இப்போது பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். ஒரு மாதத்திற்கு 24 நாட்கள் பயணம் செய்கிறேன். இந்த அளவிற்கு என் உயர்விற்கு காரணம் என் ஆண்டவர் தான். திருவிவிலியத்தை தினமும் நான் படிக்கிறேன். இரவு 3 மணிக்கெல்லாம் முழந்தாளிட்டு ஜெபம் செய்கிறேன். நான் என் ஆண்டவரை தினமும் சுவைத்துப் பார்க்கிறேன். அவர் மிக இனியவர். ரொம்ப ரொம் நல்லவர்” என மனதுருகி சொன்னார்.

அன்புமிக்கவர்களே! சினிமாத்துறை என்றாலே ஒழுக்கம் இல்லாமை, உயர்ந்த நற்பண்புகள் இல்லாமை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு மத்தியில் சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் உயா்ந்து நிற்கிறார் நடிகர் குமரிமுத்து. ஆண்டவரால் தொடப்பட்ட நடிகர் குமரிமுத்து தன்னுடைய அனுபவத்தை தன்னோடு வைத்துக்கொள்ள வில்லை எங்கும் அறிவிக்கிறார். பலர் நம் ஆண்டவரின் பெருமைகளை அறிய ஆவண செய்துக்கொண்டு வருகிறார். இயேசுவின் பெயருக்கு மகிமை செய்து வருகிறார். எல்லா இடங்களிலும் உணர்வு பூர்வமான சாட்சியால் இயேசுவை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து காது கேளாதோரை காது கேட்கும்படி செய்கிறார். பேச்சிழந்தோருக்கு பேசும் வல்லமையை வழங்குகிறார். இயேசுவிடமிருந்து அற்புத சுகத்தை பெற்றவர்கள், இயேசுவின் வல்லமையைக் கண்டு வியந்து நிற்கிறார்கள். அப்போது இயேசு இதை யாருக்கும் சொல்ல கூடாது என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறார். ஆனால் அவர்களால் முடியவே இல்லை. பேசுவோம், பேசுவோம் இயேசுவைப் பற்றி பேசுவோம் என இயேசுவைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார். காதுகேளாதோர் கேட்கவும், பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே” என்றார்கள்.
அன்புமிக்கவர்களே! நாமும் இயேசுவைப் பற்றி பேச, இடைவிடாமல் பேச, அறிவிக்க அழைக்கப்படுகிறோம். எப்படி எல்லாம் இயேசுவைப் பற்றி பேசுவது? என்பதை சற்று விளக்கமாக காண்போம்.

ஊடகங்கள் கடவுள் நமக்கு கொடுத்த மிகப் பெரிய ஆசீர்வாதம். இறைவனின் இனிய வரம். ஆகவே அவைகளின் வழியாக நாம் இயேசுவைப் பற்றி பேசவும் அறிவிக்கவும் செய்யலாம்.

1. எழுதுக்கள் பேசட்டும்!
திருப்பாடல் ஆசிரியர் திருப்பாடல் 146:2ல் எழுதுகிறார், “நான் உயிரோடு உள்ளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன், என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்”. திருப்பாடல் ஆசிரியர் கடவுளைப் புகழ்ந்து, நன்றி சொல்லி, அருள் வேண்டி, நம்பிக்கையை வெளிப்படுத்தி மொத்தம் 150 திருப்பாடல்களை எழுதியுள்ளார். அவர் கடவுள் செய்த உதவிகளுக்காக நன்றியை தன்னுடைய எழுத்துக்களால் தெரிவித்துள்ளார். அவரைப் போன்று நாமும் ஆண்டவரைப் பற்றி நம் எழுத்துக்களில் பேச வேண்டும். எப்படி?

நமக்கு அருமையான வாய்ப்பு உள்ளது. என்ன அது? அதுதான் பங்கு இதழ் மற்றும் மறைமாவட்ட இதழ், இன்னும் பல இதழ்கள் இருக்கின்றன. இவைகளில் நாம் எழுத வேண்டும். கடவுளின் கனிவான செயல்களை எழுத வேண்டும். நம் எழுத்துக்கள் வழியாக நாம் பேச வேண்டும். இதழ்களில் கடவுளின் பேரன்பை நினைத்து பேசலாம். வல்ல செயல்களை நினைத்து உருக்கமாக பேசலாம். இந்த எழுத்து என்பது கடவுளின் புகழுக்கு பெருமை சேர்க்கும்.

2. பகிர்வுகள் பேசட்டும்!
அண்மையிலே வாட்ஸ்அப்பில் மிக சிறப்பான ஒரு வீடியோ பார்த்தேன். அந்த வீடியோவில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பேசினார்கள். அவர்கள் தங்களை உரையில், “கிறிஸ்தவ சமயத்தில் நான் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன. எதற்காக? கிறிஸ்தவ சமயத்தில் குருக்கள், அருட்சகோதரிகள் செய்யும் அன்புப்பணிகள், இரக்கப்பணிகள் ஏராளம் ஏராளம். அவர்களைப் போன்று யாரும் செய்ய முடியாது. அவர்கள் மிகவும் புண்ணியமான செயல்களை செய்கிறார்கள். மிகவும் புனிதமான செயல்களை செய்கிறார்கள்” என்று நம் கிறிஸ்தவ சமயத்தைப் பற்றி அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இப்படிப்பட்ட நல்ல வீடியோக்களை பகிர வேண்டும். தினமும் இயேசுவின் மகிமையும், புகழும் விளங்கும் வண்ணம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் நல்ல செய்திகளை, படங்களை, வீடியோக்களை பகிர வேண்டும். இவைகள் இயேசுவைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கட்டும்.

3. பாடல்கள் பேசட்டும்!
அருட்தந்தை.பெர்க்மான்ஸ் ஒரு தனிநபராக இருந்து பல பாடல்களை படைத்துள்ளார். ஆண்டவரின் அன்பை உணர்ந்த அவரால் அதை அடக்கி வைக்க முடியவில்லை. ஆகவே அவா் அனைத்தையும் பாடல்களிலே கொண்டு வந்திருக்கிறார். நாமும் கடவுள் நமக்கு செய்திருக்கும் அரும்பெரும் செயலுக்காக பாடல்கள் பாடி இசை எழுப்பி மத்தளம் தட்டி அவர் புகழை தரணி அறியச் செய்ய வேண்டும்.

பாடல்களை எழுதும் கலைஞர்களே ஒன்று திருண்டு வாருங்கள். இயேசுவின் புகழை பற்றி எழுதுங்கள். இயேசுவுக்கு நன்றி சொல்லி பாடுங்கள்.

4. வாழ்க்கை பேசட்டும்!
அண்மையிலே ஒரு செய்தி வாசித்தேன். ஒரு வீடு அப்பா, அம்மா. இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை. மொத்தம் 6 குழந்தைகள். ஆறு குழந்தைகளில் 5 ஆண்களும் குருக்களாக உள்ளனர். அந்த ஒரு பெண் குழந்தையும் அருட்சகோதரியாக இருக்கிறார்கள். கடவுள் கொடுத்த ஆறு குழந்தைகளையும் அந்த குடும்பத்தினர் கடவுளுக்கே கொடுத்துவிட்டனர். பாருங்கள் இந்த தம்பதியினரின் வாழ்க்கை ஆண்டவரைப் பற்றி பேசுகிறது. எவ்வளவு அவர்கள் ஆண்டவரை அன்பு செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. வாழ்க்கையே முழுவதுமாக ஆண்டவருக்கு கொடுத்து அவர் புகழை பரப்புகிறார்கள். மிகவும் நல்ல குடும்பம் இது.

அன்புமிக்கவர்களே! நம் குடும்பம் ஆண்டவரின் குடும்பமாக மாறட்டும். ஆண்டவரின் புகழை சிந்தனை, சொல், செயலில் பரப்பும் பக்தி மிகுந்த குடும்பமாக மாறட்டும். மாற்றிக் காட்டுவோம்.

மனதில் கேட்க…
1. கடவுளைப் பற்றி ஒரு நாளைக்கு எத்தனை முறை பேசுகிறேன்?
2. ஊடகங்கள் வழியாக கடவுள் செய்த வல்ல செயல்களை பரப்ப நான் எடுக்க போகும் முயற்சிகள் என்ன?

மனதில் பதிக்க…
‘இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் கருத்தாயிரு.” (2திமோ 4 : 2)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.