மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன

இன்றைய நற்செய்தி வாசகம் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17)நோன்பைப் பற்றிப் பேசுகின்றது. இயேசு தன் சீடர்கள் நோன்பிருக்காததை நியாயப்படுத்திப் பேசுகிறார். அதே வேளையில், தேவையான நேரத்தில் அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று பதில் கூறி, அவர்களையும் தயாரிக்கின்றார்.

நோன்பு என்பது தேவை மற்றும் சூழலின் அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசுவே தன் வாழ்வில் அதை வாழ்ந்துகாட்டினார். தனது பணி வாழ்வின் தொடக்கத்தில் 40 நாள்கள் தொடர்ந்து நோன்பிருந்தார். தனது பணி வாழ்வின்போது உணவு உண்ணக்கூட நேரமில்லாத வேளைகள் வந்தபோது, அவர் நோன்பிருந்தார். அதே வேளையில் விருந்து உண்ண அழைப்புகள் வந்தபோது, அதை ஏற்று நன்கு உண்ணவும் செய்தார், உறவை வளர்த்தார்.

இயேசுவின் இந்த மனநிலையை புனித பவுலடியார் நன்கு விளக்குகிறார். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன் (பிலி 4;12) என்றார் அவர்.

நமது வாழ்விலும் அத்தகைய சமனான மனநிலையைக் கொள்வோமாக. தேவையான நேரத்தில் நன்கு உண்ணுவோம், மகிழ்வோம், இறைவனுக்கு நன்றி கூறுவோம். சில வேளைகளில் (வாரத்தில் ஒருநாள்!) நோன்பிருந்து நம்மை ஒடுக்குவோம், பிறரைப் பற்றிச் சிந்திப்போம். நற்செயல்களில் வளர்வோம்.

மன்றாடுவோம்: அன்பின்; இயேசுவே, வாழ்வும், ஞானமும் தரும் உமது வார்த்தைகளுக்காக நன்றி கூறுகிறோம். தேவையான நேரங்களில் நாங்கள் உணவை மறுத்து, நோன்பிருந்து உம்மோடும், உணவின்றி வாடும் ஏராளமான எம் சகோதர, சகோதரிகளொடும் ஒன்றிணைய எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருட்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: