மக்களுக்கு நேரிடும் தீங்கை எவ்வாறு காண இயலும்? எஸ்தர் 8:6

தாய்,தகப்பன் இல்லாத படிப்பறிவில்லாத எஸ்தர் தன்னை வளர்த்து ஆளாக்கிய மொர்தெகாய் என்ற சகோதரனுக்கு எல்லா விஷயத்திலும் கீழ்படிந்து நடந்து தனது மிகுந்த அன்பினாலும், பொறுமையினாலும் தன்னுடைய குலமாகிய யூதா குலம் முழுதும் அழியும் சூழ்நிலையில் இருந்ததை காப்பாற்றி சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்பொழுது, அதை படிக்கும் பொழுது பெண்களாகியநாம் ஒவ்வொருவரும் நன்கு தியானிக்க வேண்டுமாய் இதை எழுதுகிறேன்.

இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் உள்ள 127 மாநிலங்களையும் ஆட்சி செய்த ஒரு ராஜாவிடம் சென்று தன் குலத்தை காப்பாற்ற நான் செத்தாலும் சாகிறேன்,என்று சொல்லி துணிந்து ராஜாவின் முன் சென்று தன்னுடைய விண்ணப்பத்தை தெரிவிக்கிறதை பார்க்கிறோம்.ஆனால் அதற்கு முன் மூன்று நாள் இரவு,பகல் உண்ணாமலும், தண்ணீர் முதற்கொண்டு குடியாமலும் பக்தியோடு இறைவனிடம் வேண்டுதல் செய்து நோன்பிருந்து பின் ராஜாவிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்து, அதுவும் உடனே தெரிவிக்கவில்லை. ஞானமாக நடந்து அதாவது இரண்டு நாள் ராஜாவுக்கு விருந்து ஏற்பாடு செய்து அதில் ராஜாவை கலந்துக்கொள்ள பணிவுடன் அழைத்து பின் தனது மன்றாட்டை தெரிவிக்கிறாள்.

இன்றைய சூழ்நிலையில் பெண்களாகிய நாமும் அந்த எஸ்தரைப் போல் ஞானமாக நடந்து நமது வீட்டிலும், நாட்டிலும் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க கத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய சொந்த முயற்சியால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆண்டவரின் அளவில்லாத கிருபையை பெற்றுக்கொண்டால் நாமும் அந்த எஸ்தரைப் போல் சாதிக்கலாம். உபவாசமிருந்து பக்தியோடு கடவுளின் பாதத்தில் நம்மை ஒப்புக்கொடுத்தால் எல்லாம் வல்ல இறைவன் நம்மீது மனமிரங்கி நாம் நினைப்பதற்கும், ஜெபிப்பதற்கும்அதிகமாக தந்தருள்வார். நமக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் சோர்ந்து போகாமல் மிகுந்த அன்போடும், பொறுமையோடும் நடந்து ஆண்டவரின் துணையோடு வெற்றி வாகை சூடுவோம்.

எஸ்தரின் வேண்டுதலை ராஜா ஏற்று மொர்தெகாயை தூக்கில் போடவேண்டுமாக ஆமான் செய்து வைத்திருந்த தூக்கு மரத்தில் ஆமானையே அதில் போடும்படிக்கு ராஜா உத்தரவு செய்யும்படி எஸ்தர் செய்தாள். என்னவொரு சாதனை. இதைப்போல் தான் இன்று அந்த ஆமானைப் போல் சாத்தான் நமக்கு எதிராக பலவிதமான போராட்டங்களை நம் வாழ்க்கையில் கொண்டு வர நினைக்கிறான். அந்த ஆமானை தூக்கு மரத்தில் போட்டது போல சாத்தானையும் அக்கினி கடலிலே தள்ளும்படி அவனுக்கு எதிர்த்து நின்று போராடி கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அநேகருக்கு பிரியமாக, ஆசீர்வாதமாக வாழும்படி ஆண்டவர் நம்மை அவரின் கையில் எடுத்து வழிநடத்துவாராக.

ஆகையால்,கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது, அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு
விடுங்கள்.ஏனென்றால்,அவர் உங்கள்மேல் கவலை கொண்டு உள்ளார். 1 பேதுரு 5 : 6, 7.

அன்பு இயேசுவே!!

உம்மை போற்றி, புகழ்ந்து, ஆராதித்து, நன்றி சொல்கிறோம். இறைவா! எங்களை உமது உள்ளங்கையில் வரைந்து வைத்து இருக்கிறீர். ஒரு தாயைப்போல் தேற்றுகிறீர். அன்று எஸ்தரின் ஜெபத்தையும், மன்றாட்டையும், ராஜா கேட்டு மனமிரங்கும்படி செய்து அவளுக்கு எல்லோர் கண்களிலும் தயவு கிடைத்தது என்று படிக்கிறோமே, அதுப்போல் எங்களுக்கும் நீர் உதவி எல்லோர் கண்களிலும் தயவும், இரக்கமும் கிடைக்கும்படி செய்து நாங்கள் ஒருபோதும் சோர்ந்து போகாதபடிக்கு காத்தருள வேண்டுமாய் உமது பாதத்தில் முத்தமிட்டு, வணங்கி உம்மிடத்தில் எங்களை அர்ப்பணிக்கிறோம். அந்த எஸ்தரைப்போல் நாங்களும் எங்கள் இனத்தையும், குலத்தையும் மீட்க எங்களுக்கு போதித்து வழிநடத்தி காத்தருள வேண்டுமாய் வேண்டுகிறோம் எங்கள் இரக்கமுள்ள தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: