மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்

திருப்பாடல் 112: 1 – 2, 5 – 6, 7 – 8, 9

உதவுதல் என்பது நாம் வாழக்கூடிய சமுதாயத்தில் ஒரு நல்ல விழுமியமாக பார்க்கப்படுகிறது. இன்றைக்கு உதவக்கூடிய மனிதர்கள் எல்லாரும் நல்லவர்களா? என்றால், அதனை நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால், இன்றைய உலகத்தில், எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றைக்கொடுத்து மற்றொன்றைப் பெறுவத, நாம் வாழும் உலகில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் செய்யக்கூடிய உதவி எப்படி இருந்தால், கடவுளின் ஆசீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, இந்த திருப்பாடல் எடுத்துரைக்கிறது.

நாம் மற்றவர்களுக்கு உதவுகிறபோது எதையும் எதிர்பார்க்காது கொடுக்க வேண்டும். அவர் மேல் நாம் கொண்டிருக்கிற அன்பின் மிகுதியினால் மட்டுமல்ல, மாறாக, நம்முடைய உள்ளத்தில் எழுந்த இரக்கத்தினால், உணர்வினால் பொங்கி எழுந்து கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதுதான் மனமிரங்கி கொடுப்பது என்பதன் பொருளாகும். சாதாரணமாக, நாம் அதிகமாக அன்பு செய்கிறவர்கள் துன்பப்பட்டால், நம்மால் முடிந்ததைக் கொடுக்கிறோம். அது இயல்பு. அது நாம் கொண்டிருக்கிற அன்பின் மிகுதியினால் வெளிப்படுவது. இதுவும் சிறந்த உதவி தான். ஆனால், அதைவிட மிகச்சிறப்பானது, மனமிரங்கிக் கொடுப்பது. அது இறைவனின் அளவுகடந்த இரக்கத்தை நமக்குப் பெற்றுத்தருவதாக இருக்கிறது.

நாம் எப்பொழுது மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், எதிர்பார்த்து செய்யாமல், இருப்பதை பகிர்ந்து கொள்ளக்கூடிய மனநிலையோடு உதவி செய்வோம். அப்படி செய்யக்கூடிய உதவி தான், எந்நாளும நிலைத்து நிற்கும். இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் நமக்கு பெற்றுத்தரும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.