மனிதத்தின் முழுமை இறைமை

இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல் வழியே செல்கின்றபோது அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து கொண்டே வழிநடக்கின்றனர். சாதாரண நாட்களில் செல்லும்போது கதிர்களைக் கையால் கொய்வது குற்றம் கிடையாது. “உனக்கு அடுத்திருப்பவனுடைய விளைநிலத்திற்குச்சென்றால் உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்: ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே” (இணைச்சட்டம் 24: 25).

இங்கே சீடர்கள் செய்த தவறு ஓய்வுநாளில் கதிர்களை பறித்தது. ஓய்வுநாளை முழுமையாகக் கடைப்பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்கங்களை யூத மதத்தலைவர்கள் வகுத்திருந்தனர். அந்த ஒழுங்குமுறைகளுக்கு எதிராக அமைந்திருந்தது சீடர்களின் செயல்பாடு. சட்டம், மனிதம் இரண்டில் இயேசு மனிதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார். அதற்கு அவர்களின் மொழியிலேயே விளக்கமும் தருகிறார். பழைய ஏற்பாட்டிலே 1 சாமுவேல் 21: 1 – 6 ல் பார்க்கிறோம்: குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய தூய அப்பத்தை (லேவியர் 24: 9 – அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத்தூயகத்திலே உண்ண வேண்டும்) தானும் உண்டு, தன்னோடு உடன்வந்தவர்களுக்கும் தாவீது உண்ணக்கொடுக்கிறார். எப்படி இங்கே மனிதத்திற்கு தாவீது முக்கியத்துவம் தந்தாரோ, அதேபோல் தான் இயேசுவின் போதனையும் மனிதத்தை ஒட்டி அமைந்திருந்தது. இயேசு சட்டத்திற்கு எதிரானவர் அல்ல:

ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கக்கூடாது என்பது அவருடைய எண்ணம் அல்ல. ஆனால், மனிதம் எப்போதும் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அதுதான் கடவுளின் விருப்பம். சடங்குகள், சம்பிரதாயங்கள் கற்றுத்தரும் பொருளை அறிந்து, அதனை முன்னிலைப்படுத்துவோம்.

~அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: