மனிதர்களை கடவுளின் சாயலாகப்பார்ப்போம்

நூற்றுவர் தலைவர்கள் புதிய ஏற்பாட்டில் மதிப்போடு குறிப்பிடப்படுகிறார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, இயேசுவை “உண்மையிலே இறைமகன்” என்று ஒரு நூற்றுவர் தலைவர் சொன்னதை நாம் வாசித்திருக்கிறோம்.(மத்தேயு 27: 54). இயேசுவை ஏற்றுக்கொண்ட முதல் புறவினத்தார் கொர்னேலியு ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 10: 22) பவுல் உரோமைக்குடிமகன் என்று கேள்விப்பட்டதும், அவரைக்கலகக்கும்பலிடமிருந்து காப்பாற்றியவர் ஒரு நூற்றுவர் தலைவர். (தி.பணி 22: 26) யெருசலேமுக்கும் செசரியாவிற்கும் இடையே பவுலைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அந்த சதியை ஆயிரத்தவர் தலைவரிடம் சொல்ல பவுலால் ஏற்பாடு செய்யப்பட்டவர் ஒரு நூற்றுவர் தலைவர்.(தி.பணி 23: 17) ஆளுநர் பெலிக்ஸ், பவுலை நன்றாகக்கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்ததும் ஒரு நூற்றுவர் தலைவன்தான்.(தி.பணி 24: 23) உரோமைக்கான இறுதிப்பயணத்தின் போது, வெள்ளத்தினால் கப்பல் அலைக்கழிக்கப்பட்டபோது, அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, பவுலை தலைவராக ஏற்றுக்கொண்டதும் ஒரு நூற்றுவர் தலைவர் தான். (தி. பணி 27ம் அதிகாரம்).

இன்றைய நற்செய்தியில் (+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11) வருகிற நூற்றுவர் தலைவரும் சற்று வேறுபட்ட ஒரு மனிதராகவே இருக்கிறார். தனது ஊழியர் மேல் அளவுகடந்த அன்புள்ளவராக, ஏன் தனது பிள்ளைக்குரிய மரியாதையோடு அவருக்காக இயேசு பரிந்து பேசுகிறார். அவருடைய ஊழியர் நிச்சயம் ஓர் அடிமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவரை அடிமையாக நடத்தவில்லை. உரோமை அரசில், அடிமைகளுக்கு மதிப்பில்லை. அவர்களைப்பற்றி யாரும் கவலைப்படுவதுமில்லை. அவர்கள் நோய்வாய்ப்பட்டாலும், இறந்தாலும் கேள்வி கிடையாது. அடிமைகளுக்கு உரிமை கிடையாது. இந்தப்பிண்ணனியில் இருந்து வருகின்ற நூற்றுவர் தலைவன், தனது அடிமைக்காக, இயேசு என்கிற மனிதரிடம் வருகிறார் என்றார், மனிதர்களை மனிதர்களாகப்பார்க்கக்கூடிய பக்குவத்தை அந்த நூற்றுவர் தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு மனிதர்களை மனிதர்களாகப்பார்க்காமல், அவர்களுடைய சாதி அடிப்படையிலே நாம் பார்க்கிறோம். நமது உறவும் அதற்கேற்பதான் அமைகிறது. நாம் மற்றவரோடு நெருங்கிப்பழகுவதற்கு நமது சாதியும், புவியியல் பிண்ணனியும் தான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதற்கும் இதுதான் காரணமாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நூற்றுவர் தலைவரின் மனநிலையைப்பெற்றுக் கொள்ள மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: