மன உறுதிக்காக பாராட்டு

இனி வருகின்ற சில வாரங்களில் நாம் புதிய ஏற்பாட்டிலிருந்து, புனித பவுலடியாரின் திருமடல்களிலிருந்து முதல் வாசகத்திற்கு செவி மடுக்க இருக்கிறோம். முதல் மூன்று நாள்களும் தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்திலிருந்து நாம் வாசிக்க இருக்கிறோம். இத்திருமடல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய உண்மைகளைத் தெளிவுபடுத்தும் ஒரு திருமடல்.

இன்றைய வாசகத்தில் பவுலடியார் தெசலோனிக்க நகர இறைமக்களுக்குப் பாராட்டும், அவர்களுக்காக கடவுளுக்கு நன்றியும் செலுத்துகிறார். அவர்களின் இறைநம்பிக்கை ஓங்கி வளர்வதற்காகவும், அவர்கள் ஒருவர் ஒருவர்மீது கொள்ளும் அன்பு பெருகி வழிவது குறித்தும் அவர் பெருமிதம் கொள்கிறார். “ உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத் தன்மையையும், இன்னல்களுக்கிடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும், நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்” என்று எழுதுகிறார். ஆம், துன்ப நேரங்களில்தான் ஒருவரது இறைநம்பிக்கை உரசிப் பார்க்க முடியும். இன்னல்களின் மத்தியில்தான் மனவுறுதியும், சகிப்புத் தன்மையும் வெளிப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவின்மீது நாம் கொள்கின்ற நம்பிக்கையை நமக்கு இன்னல்கள், துன்பங்கள் நேரிடும்போது நாம் கொள்கிற மனவுறுதியால் வெளிப்படுத்த இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது.

மன்றாடுவோம்: நம்பிக்கையின் வேந்தனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்த இறைநம்பிக்கை என்னும் கொடைக்காக நன்றி செலுத்துகிறோம். எங்களது துன்ப நேரங்களில் எங்களுக்கு சகிப்புத் தன்மையையும், மன உறுதியையும் தாரும். இவ்வாறு நாங்கள் எங்கள் நம்பிக்கையை அறிக்கை இடுவோமாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: