மரித்தேன்,இதோ!சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

நமக்காகவும் நம்முடைய பாவங்களுக்காகவும், தமது ஒரே மகனை கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுத்த பிதாவாகிய தேவன் அவரை மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பி அன்றிலிருந்து இன்றுவரை நம்மோடு கூடவே இருக்கும்படி கிருபை அளித்து அவருடைய தூய ஆவியை தந்தருளியிருக்கிறார். உயிரோடு எழுந்து நாற்பது நாட்கள் வரைக்கும் தமது சீடர்களுக்கு தோன்றி அவர்களை பலப்படுத்தி பிறகு விண்ணேற்றமடைந்தார். அன்பே உருவான ஆண்டவர் நம்மை தனியாக விடாமல் தமது தூய ஆவியை தந்து அதன் மூலம் நமக்கு ஒவ்வொரு நாளும் போதித்து காத்து வழிநடத்துகிறார். மரித்தேன், ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடு நம்மோடு இருக்கிறார்.

அன்பை கட்டுப்படுத்தவோ, அடக்கி வைக்கவோ ஒருவராலும் கூடாது. அவரின் அன்பை கல்லறைக்குள் புதைத்துவிட நினைத்தவர்களே ஏமாற்றமடைந்தனர். அவர் தமது அன்பை நமக்கு கொடுக்க இன்று உயிரோடு நம் மத்தியில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார். வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும், வேறொரு மரியாவும்,கல்லறையை பார்க்க சென்றனர். திடீரென்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதின்மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து நீங்கள் அஞ்சாதீர்கள்: சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தேடுகிறீர்கள். என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று அவருடைய சீடர்களுக்கு சொல்லுங்கள், அவர் உயிரோடு எழுந்துவிட்டார் என்று அறிவியுங்கள் என்று அவர்களுக்கு .சொன்னார்.

சீடர்கள் எல்லாம் வீட்டில் இருக்கும் பொழுது இந்த பெண்கள் ஆண்டவர்மேல் வைத்த அன்பினால் அதிகாலமே எழுந்து கல்லறைக்கு செல்கிறார்கள். அவர்கள் அன்பை கட்டுப்படுத்த முடியாமல் அடக்க தெரியாமல் ஆண்டவரின் கல்லறைக்கு சென்றனர். அவர்கள் அன்பை மதித்த ஆண்டவரும் முதலாவது அவருக்கு காட்சி அளிக்கிறார். அதே ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார். யார்,யார் ஆவலோடும், அன்போடும் அவரை நாடித் தேடுகிறமோ அவர்கள்முன் நிற்பார். அவர்களுக்கு காட்சி அளிப்பார். அவர் தமது அன்பை மழையென பொழிந்து பனியைப்போல் நம்மீது இறங்கிடுவார்

அன்பானவர்களே! நமது ஆண்டவர் உயிருள்ள தேவன், வல்லமை அளிப்பவர், நம்மை ஆற்றிடும் ஆண்டவர். நம்மை தேற்றிடம் கடவுள். அவரின் அன்பை உணர்ந்தவர்களாய், ருசித்து பார்த்தவர்களாய் வாழ்வோம். மண்ணுலகிலும், விண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்பேற்பட்ட கடவுளின் பிள்ளைகள் நாம். அவர் கட்டளையிட்ட யாவையும் கடைப்பிடித்து அவருக்கே மகிமையை செலுத்துவோம். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்கிறார் நமது ஆண்டவரும், மீட்பருமான இயேசுகிறிஸ்து.ஆமென்.

ஜெபம்

அன்பின் ஆண்டவரே! எங்களுக்காக மரித்து அடக்கம் செய்யப்பட்டு இன்றும் உயிரோடு எங்களோடு வாழ்பவரே உம்மை ஆராதிக்கிறோம், போற்றுகிறோம், துதிக்கிறோம், வணங்குகிறோம், உம்மையே அன்பு செய்கிறோம். உமது அன்பிற்கு ஈடு இணை இந்த உலகில் ஒன்றும் இல்லை. நாங்கள் உம்மையே வாஞ்சித்து உம்மையே நேசிப்போம். உம்மைப்போல் மாறிட உம்மைப்போல் அன்பு செய்ய உதவி செய்யும். உண்மையான அன்பில் சுயநலமே இல்லை என்பதை நன்கு உணர்ந்து செயல்பட கற்றுத்தாரும். நாங்கள் நடக்க வேண்டிய வழியில் எங்களை வழிநடத்தும். எவ்வளவு கஷ்டங்கள் பாடுகள் வந்தாலும் உமது அன்பில் இருந்து விலகி போய்விடாதபடிக்கு காத்துக்கொள்ளும். நீர் தியாகமாய் எங்களுக்கு அளித்த உமது உயிரை நாங்கள் போற்றி வணங்கி, ஆராதிக்க உதவிச் செய்யும். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே ஏறேடுக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: