மாசில்லாக் குழந்தைகள் !

குழந்தை இயேசுவின் பொருட்டுத் தம் உயிரை இழந்து, மறைசாட்சிகளான மாசில்லாக் குழந்தைகளின் விழாவை இன்று கொண்டாடுகிறோம். இந்த நாளில் நமது குடும்பங்களிலுள்ள அனைத்துக் குழந்தைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்திப்போமா.

நாம் வாழும் நாள்கள் வியப்பான, விரைவான நாள்கள். இக்காலத்தில் குழந்தைகள் வெகு விரைவிலேயே தங்கள் மாசின்மையை இழந்துவிடுகின்றனரோ என்னும் சந்தேகம் நமக்கு எழுவது இயல்பே. இக்காலத்துக் குழந்தைகள் அறிவாற்றலிலும், திறன்களிலும், புரிந்துகொள்ளும் தன்மையிலும் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கம் பெரிய அளவில் அவர்கள்மீது ஏற்பட்டுள்ளது.

1. தொலைக்காட்சியினால் நல்ல பல செய்திகளை அவர்கள் பெற்றுக்கொண்டாலும், வன்முறை, பாலியல் வன்முறை போன்ற தவறான செய்திகளையும் தொலைக்காட்சியின் மூலம் இளம் வயதிலேயே நம் குழந்தைகள் பெற்றுவிடுகின்றனர்.

2. அத்துடன், குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பழக்கமும் பல நாடுகளிலும் வெளிவராத செய்தியாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

3. நமது கல்வி முறையும் இளம் வயதிலேயே அதிக வேலை தரும் களைப்பான, போட்டிகள் நிறைந்த, மன அழுத்தம் தரும் கல்வி முறையாக இருக்கிறது. இவை அனைத்துமே குழந்தைகள் தம் மாசின்மையை விரைவிலேயே இழக்கும் நிலைக்குக் காரணமாக இருக்கின்றன. பெற்றோரும், கல்வியாளர்களும், சமூக ஆhவலர்களும் இவை பற்றிச் சிந்தித்து, குழந்தைகளை இத்தகைய ஆபத்துகளிலிருந்து மீட்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால். பெத்லகேமைச் சுற்றியிருந்த பகுதிகளில் தம் உயிரை இழந்த மாசில்லாக் குழந்தைகளின் நிலை இனிமேலும் நம் இல்லங்களில் தொடரத்தான் செய்யும்.

மன்றாடுவோம்: குழந்தைகளைப் பெரிதும் நேசித்த அன்பு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். குழந்தைகள் என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் குழந்தைகளை ஆசிர்வதித்து, அவர்கள் ஊடகங்களாலும், கல்வி முறையாலும், மனச்சான்றில்லாத மனிதர்களாலும் தங்கள் மாசின்மையை இழந்துவிடாமல் காப்பாற்றுவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: