மாற வேண்டிய வாழ்க்கை முறை

நம்மை நாம் தீர்ப்பிடுவதை விட, அடுத்தவரை நாம் தீர்ப்பிடுவது நமக்கு எளிதானதாக இருக்கிறது. நாம் செய்யக்கூடிய குற்றங்கள் நமக்கு அவ்வளவாக கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால், அடுத்தவர் செய்யும் குற்றங்கள், அதிலும் குறிப்பாக, யாரை நாம் வெறுக்கிறோமோ அவர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு மிகப்பெரிதாக தெரிகிறது. நாம் சாதாரண நிலையில் இருக்கிறபோது, அது மற்றவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, நமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை அடக்கி ஆளவும், பழிவாங்கவும் நினைக்கிறோம். அதையே செய்கிறோம். அப்படிப்பட்ட அதிகாரவர்க்கத்தினரின் பழிவாங்கலுக்கு பலியானவர் தாம் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. ஆனால், தனக்கு அதிகாரம் இருந்தாலும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தன்னுடைய போதனைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதற்காக, மற்றவர்களின் பாதங்களைக் கழுவி, ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவரும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துதான்.

இயேசுவின் போதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு மிகமுக்கிய காரணம் அவருடைய வாழ்க்கை முறை. தொண்டாற்ற விரும்புகிறவர் தொண்டனாக இருக்க வேண்டும். பணியாற்ற விரும்புகிறவர் தன்னையே பணியாளராக கருத வேண்டும். இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் வெறுமனே போதனையோடு நின்றுவிட்டால் மட்டும் போதாது. அதனையே வாழ்வாக்க வேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தி மூலமாக இயேசு நமக்குக் கற்றுத்தருகிறார். அவரது வார்த்தைகள் மட்டுமல்ல, அவரது வாழ்வும் நமக்கு போதனை. உண்மையான சீடத்துவ வாழ்வு வெறும் வார்த்தைகளை மையமாகக் கொண்டு வாழப்படுகிற வாழ்வு அல்ல. வாழ்வையும் மையப்படுத்த வேண்டும்.

இன்றைக்கு பலர் இயேசுவைப் பின்தொடர்ந்தாலும், அவரை அருகிலிருந்து பின்பற்றுவர்கள் மிக சொற்ப எண்ணிக்கை தான். அதனால் தான் இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயம் மற்றவர்கள் மனதில் அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இன்றைய திருத்தந்தை உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்றால், அவரது எளிய வாழ்வுமுறையும் அதற்கு காரணம். நமது வாழ்க்கை முறையை, சீடத்துவ வாழ்விற்கு ஏற்றதாக மாற்றுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: