முழு ஆர்வத்துடன் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வோம்

கடவுள் தம்மை மக்கள் தேடவேண்டும், தட்டித் தடவியாவது தம்மைக்கண்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக உயிரையும், மூச்சையும், மற்றனைத்தையும் கொடுத்தார். மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்கு தேவையில்லை. ஏனெனில் ஒரே ஆளிலிருந்து மக்களினம் முழுவதையும் படைத்து அவர்களை மண்ணுலகில் குடியிருக்கச் செய்தார். குறிப்பிட்ட காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார்.

அவர் சொல்ல ஆகும்,அவர் கட்டளையிட நிற்கும்.நமது தேவைகள் யாவையும் பூர்த்தி செய்கிறவர் அவரே! நம்மை நோயிலிருந்தும், தீராத பிரச்சனைகளில் இருந்தும் கடன் பிரச்சனையிலிருந்தும், நம்மை காப்பவர் அவரே. ஒவ்வொரு நாளும் நம்மை கரம் பிடித்து கண்மணியைப்போல் காப்பவர் அவரே! நமது விண்ணப்பத்தையும், வேண்டுதல்களையும் தருபவர் அவரே!

அவரே நமக்கு கட்டளையிடுகிறவர்.அவர் கரத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் சிறந்ததாய் இருக்கும். ஒவ்வொரு நாளும் நம்மை காத்து வழிநடத்தும் தெய்வம் அவரே. அவரையே நாம் ஒவ்வொரு நாளும் துதித்து ஆராதிப்போம்.

ஏனெனில்,நம் குற்றங்களுக்காக காயமடைந்தார். நம்முடைய தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவர் பட்ட காயங்களால் நம்மை நோயிலிருந்து குணப்படுத்துகிறார். நமக்காக சிறுமைப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவரை நாம் மறக்கலாமா? நம் மனம் விரும்பும்படி காரியங்களை நடத்த நினைக்கலாமா?? அவர் சித்தம் அறிந்து ஆண்டவரின் நாமத்தை மகிமைப்படுத்த வாஞ்சிப்போம். நம்முடைய முழு இதயத்தோடு அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோம்.

ஆண்டவரை அறிகிற அறிவினால் நிறைந்து அதிகாலையில் அவரை தேடி கண்டுபிடித்து போற்றுவோம். அப்பொழுது ஆண்டவரின் கருணை நமக்கு கிடைக்கும். மே மாதம் முழுதும் நம்மோடு இருந்து நம்முடைய தேவைகள் யாவையும் பூர்த்தி செய்துள்ள அவரின் கிருபையை போற்றி மகிழ்வோம். எந்தப் பொல்லாப்பும் நம்மை தாக்காதவாறு அவரின் செட்டையின் மறைவில் காத்து புதிய மாதத்தில் நம்மை வழிநடத்தப் போகும் ஆண்டவரை துதித்து அவர் காட்டும் நீதியின் வழியில் நடப்போம்.

ஜெபம்

அன்பே உருவான இறைவா! இதோ எங்கள் காலங்களும், நாட்களும் உமது கரத்தில் அல்லவோ இருக்கிறது.அவற்றை உமது சித்தப்படி நடத்தி எங்களை உமது பாதுகாப்பில் மறைத்து காத்து வந்திருக்கிறீர். போனமாதம் முழுவதும் எங்களோடு கூடவே இருந்து கண்ணின் மணியைப்போல் காத்து வந்தீர். எங்கள் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் கொடுத்து ஆசீர்வதித்து வழிநடத்தியதற்காய் உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.அதுபோல் வருகிற
ஜூன் மாதம் முழுதும் எங்கள் கரம் பற்றி வழிநடத்த வேண்டுமாய் விரும்பி வேண்டி நிற்கிறோம்.நீர் நீதியுள்ளவர். உம் செயல்கள் யாவும் நேரியவை.உமது வழிகள் அனைத்திலும் இரக்கமும், உண்மையும் விளங்குகிற படியால் உம்மையே மன்றாடி உம்மிடத்தில் சரணடைந்த
எங்களை இந்த மாதத்திலும் காத்து எங்கள் தேவைகள் யாவையும் நிறைவேற்றி ஆசீர்வதிக்க வேண்டுமாய் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம், எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: