மூன்றாம் நாளில் பணி நிறைவுபெறும் !

நல்ல தலைவர்களிடம் இருக்கின்ற பண்புகளுள் ஒன்று தங்களின் பணி பற்றிய இலக்குத் தெளிவு. தாங்கள் ஆற்ற பணிகள் என்னென்ன, அவை எவ்வளவு காலத்திற்குள் முடிக்கப்படும், அந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஆற்றல்கள் எவை என்பவற்றையெல்லாம் திறன்மிகு தலைவர்கள் நன்கு தெளிவாக அறிந்திருப்பர். இயேசுவிடம் அத்தகைய தலைமைப் பண்புகள் நிறைந்திருந்தன என்பதைச் சிந்திக்கும்போது நமக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு மேலிடுகிறது,

இயேசு தன் பணியைப் பற்றியும், அதில் உள்ள இடையூறுகளைப் பற்றியும் அறிந்திருந்தார். எனவே, அச்சமின்றித் துணிவுடன் பணியாற்றினார். அத்துடன், தனக்குள்ள காலக் குறைவையும் கணக்கில் கொண்டு, விரைந்து செயலாற்றினார். ஓய்வெடுக்கவும், உண்ணவும்கூட நேரமின்றிப் பல நேரங்களில் அவர் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றினார் என்பதை நற்செய்தி நுhல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப் போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாகவேண்டும் ” என்றார் இயேசு. அவரிடமிருந்து இந்த தலைமைப் பண்பை நாம் கற்றுக்கொள்வோம். விரைந்து செயலாற்றவும், திட்டமிட்டுப் பணியாற்றவும், குறுகிய காலத்தில் நிறைவான பணிகள் புரியவும் இயேசுவே நமக்கு மாதிரி.

மன்றாடுவோம்: பணிகளைத் திறம்பட ஆற்றிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மிடமிருந்த இலக்குத் தெளிவு, அச்சமின்மை, திட்டமிட்டுப் பணியாற்றல், விரைந்து செயல்படுதல், பணி நிறைவை அறிந்திருத்தல் போன்ற அனைத்துத் தலைமைப் பண்புகளிலும் நானும் வளர எனக்குத் துhய ஆவியைத் தந்தருளும்.. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: