மூன்று சான்றுகள் !

யூதர்களின் சட்டப்படி ஒருவர் தமக்குத் தாமே சாட்சியாக இருக்க முடியாது. அவருக்குப் பிற சாட்சிகள் தேவை. எனவே, இயேசுவும் யூதர்களின் சட்டத்தை மதித்து, தம்முடைய சான்றுகளை முன்வைக்கிறார்.

1. இயேசுவின் முதல் சான்று திருமுழுக்கு யோவான். அவரைப் பற்றியே இயேசு “என்னைப் பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்” என்கிறார் இயேசு. திருமுழுக்கு யோவான் ஒரு நேர்மையாளர், இறைவாக்கினர். அவருடைய சான்று ஏற்றுக்கொள்ளத்தக்கது.

2. இயேசுவின் இரண்டாவது சான்று அவரது பணிகள். ” நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்”. கனிகளைக் கொண்டே மரத்தை எடைபோடலாம் என்னும் இயேசுவின் வாக்கிற்கு, அவரது பணிகளே உரைகல். இயேசுவின் பணிகள் நேர்மையான, உள்நோக்கமற்ற, தந்தைக்குப் பணிந்து அவர் ஆற்றிய பணிகள்.

3. இயேசுவின் மூன்றாவது சான்று மறைநூல். ” மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என அதனைத் துருவி துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே. அமமறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது”. இறைவார்த்தையின்படியே இயேசு வாழ்ந்தார், இறைவார்த்தை முன்மொழிந்த அனைத்து வாக்குகளையும் அவரது வாழ்வும், பணிகளும் நிறைவேற்றின.

இயேசுவைப் போலவே நமக்கும் மறைநூலும், நமது நேர்மையான பணிகளும், யோவானைப் போன்ற நேர்மையான மனிதர்களும் சான்றுகளாய் இருந்தால், நாம் பேறுபெற்றவர்கள்.

மன்றாடுவோம்: தந்தையின் திருவுளப்படியே பணியாற்றிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போலவே நாங்களும் தந்தை இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து, நேர்மையாகப் பணியாற்றி, நேர்மையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வாழும் வரத்தைத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ பணி குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: