மெல்லிய சத்தம்

இறைவாக்கினர் எலியாவின் காலத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரின் மனைவி ஈசபேல் எலியாவைக் கொல்ல நினைத்து அந்த ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, எலியாவே நீர் என்னுடைய இறைவாக்கினர்களை கொன்றது போல நானும் நாளை இந்த நேரத்தில் உன் உயிரை எடுக்காவிடில் என் தெய்வங்கள் எனக்கு தண்டனை கொடுக்கட்டும் என்று சொல்லச் சொல்லி ஆள் அனுப்புகிறாள்.ஏனெனில் இதற்குமுன் பொய்யான இறைவாக்கினரை எலியா கொன்று போட்டார்.அதனால் அவளின் சொல்லுக்கு பயந்து எலியா தனது உயிரைக்காத்துக்கொள்ள தப்பி ஓடுகிறார்.அவர் பாலைநிலத்தில் ஒருநாள் முழுதும் பயணம் செய்து அங்கே ஒரு சூரைச்செடியின் அடியில் அமர்ந்துக்கொண்டு தான் சாகவேண்டும் என ஆண்டவரிடம் மன்றாடுகிறார்.

ஆண்டவரே! நான் வாழ்ந்தது போதும்,என் உயிரை எடுத்துக்கொள்ளும்,என சொல்லிவிட்டு உறங்கிவிடுகிறார். அப்போது வானதூதர் அவரை தட்டி எழுப்பி எழுந்து சாப்பிடு,என்று சொல்லி ஒரு தட்டில் அப்பமும்,ஒரு குவளையில் தண்ணீரும் இருக்கக்கண்டு அவற்றை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் படுத்து உறங்குகிறார். இரண்டாம்முறை தூதன் அவரை எழுப்பி எழுந்திரு நீ பயணம் செய்ய வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது, என்று சொல்லி மறுபடி ஒரு தட்டில் உணவை வழங்குகிறார்.அந்த உணவை சாப்பிட்ட பிறகு எலியா நாற்பது நாள் இரவும்,பகலும்,நடந்து ஆண்டவர் கொடுத்த வலிமையினால் ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

அன்பானவர்களே!! இந்த நாளிலும் நாம் நமக்கு ஏற்படும் துன்பங்களினாலும்,துயரங்களினாலும் நமது மனம் சோர்ந்து போய்விடுகிறது. அதனால் நமது வாழ்க்கையை வெறுத்து செத்துப்போகக் கூடாதா? என்று சிலசமயம் எண்ணுகிறோம். அனால் நாம் அவ்வாறு நினைப்பதை நமது ஆண்டவர் ஒருநாளும் விரும்பவே மாட்டார்.ஏனெனில் அவர் ஒருபோதும் நம்மை கைவிடாதவர். நம்மோடு கூடவே இருந்து நம்மை அரவணைத்து காப்பவர்.நமது தேவைகள் யாவும் சந்திக்க அவர் ஆவலோடு காத்திருக்கிறார்.நாம் அவரை நோக்கி கூப்பிடும் பொழுது நமது மன்றாட்டைக் கேட்டு நமக்கு பதில் அளித்து நம்மை கரம் பிடித்து வழிநடத்துவார். நம்முடைய இதயத்தில் குடி இருக்கும் அவருக்கு நமது தேவைகள் யாவும் தெரியாதா என்ன? சில சமயம் நமது விசுவாசம் சோதித்து பார்க்கப்படும். அப்பொழுதும் நாம் மன உறுதியோடு இருப்போமானால் நமது விசுவாசத்தை கனப்படுத்துவார்.

எலியாவும் நம்மைப்போல் ஒரு மனிதன் தானே! அவருக்கு உதவிய ஆண்டவர் நமக்கு உதவ மாட்டாரா? கண்டிப்பாக உதவுவார்.நமது நம்பிக்கையும்,நாம் அவர்மேல் வைக்கும் அன்பும் நம்மை காப்பாற்றும். எலியா ஆண்டவரிடம் இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கையை உதறிவிட்டனர். உமது பலிபீடங்களை தகர்த்து விட்டனர். உமது இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள் என்று புலம்புகிறார். அப்போது இறைவன் வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லயிருக்கிறேன் என்று சொல்லுகிறார்.

அப்போது அங்கே ஆண்டவர் திருமுன் பெரும் சுழல்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளை சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை.காற்றுக்குப்பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. அதற்குப் பின் தீ கிளம்பிற்று,அந்த தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. அந்த தீக்குப் பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்.அப்போது எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.அப்பொழுது எலியா தனக்கு நேரிட்ட துன்பங்களை ஆண்டவரிடம் சொல்கிறார்.அப்பொழுது ஆண்டவர் எலியாவிடம் அவர் செய்ய வேண்டிய பணியை சொல்லி நீ திரும்பி செல்.இதோ! நான் பாகாலுக்கு மண்டியிடாத ஏழாயிரம் பேரை எனக்காக வைத்து இருக்கிறேன் என்று சொல்கிறார்.

இப்படித்தான் ஆண்டவர் இந்த நாளிலும் நம்முடைய மன சாட்சியின் மூலம் ஒரு மெல்லிய சத்தத்தோடு நம் ஒவ்வொருவரின் மூலம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். ஏனெனில் அவர் மனிதர்களின் நடுவில் அவரின் உறைவிடம் உள்ளது ,அவர் அவர்கள் நடுவில் குடியிருப்பார். நாம் அவரின் மக்களாக இருப்போம். அவர் நமது கடவுளாக இருப்பார் என்று [ திருவெளிப்பாடு 21 : 3 ல் ] வாசிக்கிறோம்.அன்று எலியாவோடு ஒரு மெல்லிய சத்தத்தோடு பேசிய ஆண்டவர் இன்று நம்மோடு பேசுவார்.நம்முடைய நோய்களை குணமாக்குவார். நம் தேவைகள் யாவையும் தீர்த்து வைப்பார்.

ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அவரின் பேரன் ஒரு கைகடிகாரம் பரிசாக கொடுத்திருந்தான். அந்த பேரன் மேல் அவர் அளவுகடந்த பாசம் வைத்திருந்ததால் அந்த கடிகாரத்தை தனது பேரனை நேசிப்பதுபோல நேசித்தார். ஏனெனில் அவர் பேரன் வேறொரு நாட்டில் குடியிருந்தான். ஒருநாள் அந்த பெரியவர் ஒரு தோட்டத்துக்கு போயிருந்த பொழுது அந்த கடிகாரம் எங்கோ தவறி விழுந்துவிட்டது. உடனே அந்த பெரியவர் மிகவும் வேதனை அடைந்து அங்கு உள்ள பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்பொழுது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சில பிள்ளைகள் அவரிடம் வந்து ஏன் தாத்தா சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.அப்பொழுது அவர் அந்த கடிகாரம் காணாமல் போனதை சொன்னார்கள்.உடனே அந்த பிள்ளைகள் நாங்கள் தேடித்தருகிறோம் என்று சொல்லி அந்த தோட்டம் முழுதும் தேடினார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை.எல்லோரும் போனபிறகு ஒரு சிறு பையன் மறுபடி வந்து தாத்தா நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் அதை தேடித்தருகிறேன் என்று சொல்லி ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆண்டவரிடம் ஒரு சிறு ஜெபம் செய்தான். சிறு குழந்தைகளை நேசிக்கும் ஆண்டவரே அந்த கடிகாரத்தின் சத்தத்தை கேட்க உதவி செய்யும் என்று சொல்லிவிட்டு உற்று கவனித்தான். பிறகு எழுந்து சிறிது தூரம் போனான். அப்பொழுது அங்கே ஒரு செடியின் அடியில் அந்த கடிகாரம் கிடந்தது.அதை எடுத்துவந்து அந்த பெரியவரிடம் கொடுத்தான். அவருக்கோ மிகுந்த சந்தோஷம் .எப்படிப்பா கண்டுபிடித்தாய் என்று ஆச்சரியத்தோடு கேட்டபொழுது அந்த சிறுவன் நிறையப்பேர் தேடினபொழுது ஒரே சத்தமாக இருந்தது. அதனால் முள்ளின் சத்தத்தை என்னால் உணர முடியவில்லை. இப்பொழுது சத்தம் இல்லாமல் இருந்ததால் அந்த முள்ளின் மெல்லிய சத்தம் வந்த திசையை நோக்கி போனேன்.அதைக் கண்டுபிடித்தேன், என்று கூரினான்.

பிரியமாவர்களே! இப்படித்தான் ஆண்டவர் நம்மேல் அன்புக்கொண்டு ஒரு மெல்லிய சத்தத்தோடு ஒவ்வொருநாளும் ஒவ்வொருவரோடும் பேசிக்கொண்டுத்தான் இருக்கிறார். நாம் அவரின் சத்தத்தை கேட்டு நடந்தோமானால் நம்மோடு பேசி நாம் செய்யும் எல்லாக் காரியத்திலும் கூடவே இருந்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். நம்முடைய கண்ணீரை துடைப்பார். வாழ்வை செழிக்க செய்வார்.

அன்பே உருவான இறைவா!!

உம்மை போற்றி துதிக்கிறோம். நீர் தாமே எங்களோடு கூடவே இருந்து உமது மெல்லிய சத்தத்தோடு பேசி அரவணைத்து வழிநடத்தி செல்வதற்காக உமக்கு நன்றி சொல்கிறோம். எல்லாக் காரியங்களிலும் உமது கரம் எங்களோடு இருந்து காத்துக்கொள்ள வேண்டுமாக விரும்பி மன்றாடுகிறோம். நீர் எங்கள் ஜெபத்தையும் மன்றாட்டையும் கேட்டு ஆசீர்வதித்து உமது கிருபையால் தாங்கி காத்தருளும். எல்லா மகிமையும் உமது ஒருவருக்கே உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே !

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.