மேன்மை

குருத்துவத்தின் மேன்மை

குருத்துவத்தின் மாண்பு இந்த நற்செய்தி (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12) வெளிப்படுகிறது. குருத்துவம் என்பது தேர்ந்து கொள்வது அல்ல. அது கொடுக்கப்படக்கூடிய கொடை. கடவுளின் அருள் இல்லாமல் யாரும் குருத்துவத்தைப் பெற்று, வாழ்ந்துவிட முடியாது. அது ஒரு பெறுதற்கரிய பேறு. இந்த மகிமையை இயேசு நமக்கு தருகிறார். திருமணத்தின் மகிமையை, ஆண், பெண் திருமண உறவு, எந்த அளவுக்கு புனிதமானது என்பதை வலியுறுத்தும் இயேசு, அதோடு கூட, குருத்துவத்தின் புனிதத்தன்மையையும் சொல்வது அற்புதமானது.

குருத்துவம் என்பது கடவுளுக்கான முழுமையான அர்ப்பணம். கடவுள் பணிக்காக, கடவுளின் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, அதற்காக தன் முழு ஆற்றலையும் கொடுப்பது. அந்த குருத்துவப் பணியில் கடவுளின் அளவுகடந்த, அன்பும், அருளும் நிறைவாகக் கிடைக்கிறது. குருத்துவம் என்பது எளிதான பணி அல்ல. அதனை கடவுள் அருளின்றி யாரும் வாழ்ந்துவிடவும் முடியாது. அதன் மகிமை போற்றப்பட வேண்டும். அந்த பணியை ஏற்றிருக்கிறவர்களுக்கு, நமது முழு ஒத்துழைப்பையும், அதன் மாண்பு காப்பாற்றப்படுவதற்கு உதவியையும் செய்ய வேண்டும்.

குருத்துவப்பணியின் மகிமையை நாம் உணர்கிறோமா? திருமணத்தின் புனிதத்தன்மை நம்மால் மதிக்கப்படுகிறதா? இன்றைக்கு அருட்சாதனங்களைப்பற்றிய தெளிவும், சரியான புரிதலும் இல்லாத நிலையைப் பார்க்கிறோம். அதன் புனிதத்தன்மை உணர்த்தப்பட வேண்டும். அது எடுத்துரைக்கப்பட வேண்டும்.


திருமணத்தின் மேன்மை

இயேசுவின் காலத்தில், விவாகரத்து பற்றி, பல கேள்விகள் மக்கள் மனதில் இருந்தது. அது எளிதில் தீர்க்க முடியாததாக இருந்த, குழப்பமான தலைப்பு. யூதப்போதகர்கள் இரண்டு விதமான படிப்பினைகளைப்பின்பற்றி, இரண்டு பிரிவுகளாக இருந்தனர். முதல் படிப்பினை “ஷம்மாய்“. இதன்படி, விவாகரத்து எளிதில் பெற முடியாததாக இருந்தது. விபச்சாரத்தில் பிடிபட்டிருந்தால் மட்டுமே, ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய முடியும். மற்றபடி விவாகரத்து எளிதில் பெற முடியாத ஒன்றாக இருந்தது. மற்றொரு படிப்பினை ”ஹில்லல்”. இதன்படி, சாதாரண காரியத்திற்கும், ஒரு பெண்ணை விவாகரத்து மூலம் விலக்கிவிடலாம்.

இயேசுவிடத்தில், பரிசேயர்கள் விவாகரத்து பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது, இந்த இரண்டு படிப்பினைகளை மனதில் வைத்துதான், கேட்டனர். இரண்டில், இயேசு எதற்கு ஆதரவு தருகிறார், அதன்மூலம் எப்படி, அவரைச்சிக்க வைக்கலாம் என்பதுதான், அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இயேசு அவர்கள் எதிர்பாராத வண்ணம் அருமையான பதிலைத்தருகிறார். அவர் முதல் பெற்றோரை இங்கே குறிப்பிடுகிறார். ஆதாமும், ஏவாளும் படைக்கப்பட்டபோது, வேறு யாரும் இல்லை. அவர்கள் ஒருவர் மற்றவருக்காகவேப் படைக்கப்பட்டனர். ஒருவர் மற்றவரில்லாத உலகை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒருவரில்லாமல் மற்றவரும் இல்லை என்ற அளவுக்கு அவர்கள் வாழ்ந்தனர். அதுதான் திருமண உறவில் பின்பற்றப்பட வேண்டும். திருமணம் என்பது புனிதமான உறவு. அது எதனாலும் முறிக்கப்பட முடியாது என்பதுதான் இயேசுவின் வாதம்.

திருமணம் கடவுள் முன்னிலையில் வாக்குறுதியாக நிறைவேற்றப்படுகிறது. இரண்டு பேரின் இணைவும், இசைவும் கடவுள் முன்னிலையில், கடவுளின் பெயரால் நடைபெறுகிறது. அதனுடைய முக்கியத்துவத்தை, திருமண உறவில் இணைக்கப்பெறும் அனைத்து தம்பதியரும் நினைவுகூற வேண்டும். அதன் மகத்துவத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.