யாருக்கு முன்னுரிமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தமது குடும்பம், தமது சீடர்கள் அடங்கிய குழுமம் இவற்றில் யாருக்கு முன்னுரிமை தருகிறார் என்பது நமக்குப் பாடமாக அமைகிறது. இரண்டு தரவுகளை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

1. இயேசு மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவரது தாயும், சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களும் சரி, இயேசுவும் சரி குடும்பம் முன்னுரிமை பெறவேண்டும் என்று எண்ணவில்லை. எனவே, இயல்பாகவே அவர்கள் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள்.

2. இயேசுவும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே தமது குடும்பத்தினர் என்று சொல்லி, தம்மோடு இருந்து, தமது அருளுரையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றார்.

இறையாட்சியின் படிமுறையில் குடும்பத்தைவிட, சீடத்துவமே முதன்மை பெறுகிறது என்பதை நாம் கற்றுக்கொள்வோம். நமது இரத்த உறவுகளைவிட, இறையாட்சியின் உறவுகளுக்கு இயேசுவைப்போல நாமும் முன்னுரிமை கொடுக்க முன்வருவோம். நமது குடும்பத்தினரையும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக மாற்றி. அவர்களை இறைநம்பிக்கையின் அடிப்படையிலும் நமது நெருங்கிய உறவுகளாக மாற்றுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மைப் போல இறையாட்சியின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கும் அருளைத் தந்தருளும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.