யார்தான் மீட்புப்பெற முடியும்?

இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். நாசரேத் என்பது ஒரு கிராமம் அல்ல. அது ஒரு பட்டணம் அல்லது நகரம். ஏறக்குறைய இருபதாயிரம் பேர் அங்கே வசித்து வந்தனர். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்தமக்கள் இயேசுவிடத்தில் கோபப்படுகிறார்கள். இயேசு அப்படி என்ன தவறு செய்தார்? அவருடைய போதனையில் மக்களைக் கோபப்படுத்துகின்ற அளவுக்கு கூறப்பட்ட செய்தி என்ன? சீதோனும், சிரியாவும் புற இனத்துப்பகுதிகள். இயேசு பிறஇனத்தவரை உயர்த்திப்பேசுவதுதான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். எனவே, யூதர் அல்லாத மற்றவர்களை அவர்கள் இழிவாகக்கருதினர். இப்படித்தாங்கள் இழிவாகக்கருதும் பிறஇனத்தவரை, யூதரான இயேசு, புகழ்ந்துகூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே, அவரை வெளியே துரத்தி, மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றனர். இயேசு அவர்களிடம் இருந்து தப்பி, அங்கிருந்து போய்விடுகிறார்.

இயேசு எதற்காகப் பிற இனத்தவரை உயர்த்திப்பேச வேண்டும்? எதற்காக அதை யூதர்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டும்? இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார். இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இரண்டுபேரிடத்திலுமுள்ள பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை. கைம்பெண்ணிடம் மற்றவர்களுக்குக்கொடுக்கக்கூடிய அளவுக்கு மாவோ, எண்ணெயோ இல்லை. இதுதான் அவளிடம் கடைசியாக இருந்தது. இருக்கிற மாவும், எண்ணெயும் முடிந்தவுடன் அவளும், அவளுடைய பிள்ளையும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். ஏனென்றால், நாடு முழுவதும் பஞ்சம். ஆனாலும், எலியாவின் வார்த்தைகளை நம்பி, இருந்ததையும் அவருக்குக்கொடுக்கிறாள். அதேபோல, நாமான் பெரிய படைத்தளபதி. செல்வந்தன். இருந்தாலும், எலிசாவின் வார்த்தைகளை நம்பி, அவருக்குப்பணிகிறார். அவர் சொன்னதைச்செய்கிறார். நலமடைகிறார். நம்பிக்கைதான் இரண்டுபேருக்கும் மீட்பைத்தந்தது. இயேசு சொல்ல வருகிற கருத்து இதுதான்: யாராக இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, கடவுளுக்கு நெருக்கமான இனமாக இருந்தாலும், நம்பிக்கைதான் ஒருவருக்கு மீட்பைத்தர முடியுமே தவிர, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற தகுதி மட்டும், ஒருவருக்கு மீட்பைப்பெற்றுத்தர முடியாது. ஒவ்வொருவரும் நம்பிக்கையினால்தான் வாழ்வு பெறுகின்றனர்.

நான் கிறிஸ்தவன், நான் ஓர் அருட்சகோதரி, நான் ஓர் அருட்பணியாளர் என்பதால் நாம் மீட்பைப்பெற்றவிட முடியாது. நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டும். அப்போதுதான் நாம் மீட்புப்பெற முடியும். நம்பிக்கை வாழ்வு வாழ்கிற அனைவருக்கும் கடவுளின் அரசில் இடமுண்டு.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: