யார் பெரியவர் ?

தங்களுக்குள் யார் பெரியவர் என்று தம் சீடர்கள் வாதாடிக்கொண்டிருந்ததை அறிந்த இயேசு வருத்தத்துடன் அவர்களுக்கு இறையாட்சியின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

“ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடைசியானவராகவும், அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்பதே இயேசுவின் போதனை. இறையாட்சியின் மதிப்பீடு.

ஆனாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் திருச்சபையில், துறவற சபைகளில், பங்குகளில், அன்பியங்களில் “யார் பெரியவர்?” என்னும் விவாதம் எழத்தானே செய்கிறது? காரணம், கிறித்தவம் என்பது என்ன என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளாததுதான். பதவிக்கான போட்டிகளும், பிறர் முன்னேறிவிடக்கூடாது என்னும் பொறாமை உணர்வும் இன்னும் நமது மனங்களிலே புதைந்துகிடப்பதால்தான்.

இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, நம்மையே தாழ்த்திக்கொள்ள, பிறருடைய தலைமையின்கீழ் பணிபுரிய முன்வருவோம். அப்போது, இறையரசில் நாம் பெரியவர்களாயிருப்போம்.

மன்றாடுவோம்: இறைமகனாயிருந்தும் உம்மையே தாழ்த்திக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் மத்தியில் உள்ள “யார் பெரியவர்?” என்னும் போட்டி மனநிலையை அகற்றி, நாங்கள் ஒருவருக்கொருவர் பணி செய்யவும், பிறரின் தலைமையை ஏற்று செயல்படவும் நல்ல மனதை எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

– பணி குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: