யெருசலேமின் மேன்மை

யெருசலேம் தேவாலயம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மையமாக இருந்தது. அது ஏதோ வானுயர்ந்த, மகிமைக்குரிய கட்டிடம் மட்டும் அல்ல. மாறாக, அது கடவுளின் பிரசன்னம் நிறைந்த இடம். கடவுள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. பகைவர் முதலில் கைப்பற்ற விரும்பும் இடமாகவும், அது கருதப்பட்டது. அப்படிப்பட்ட யெருசலேமையும், அதன் மையத்தில் அமைந்திருந்த தேவாலயத்தையும் பார்த்து, இயேசு இறைவாக்கு உரைக்கிறார்.

இயேசுவின் இறைவாக்கு அவரின் உயிர்ப்பிற்கு பிறகு வரலாற்றில் நிறைவேறியது. கி.பி. 70 ம் ஆண்டில், உரோமைப்படைகள் யெருசலேமிற்குள் நுழைந்தன. கற்கள் மேல் கற்கள் இராதபடி, அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான பேர் நாடு கடத்தப்பட்டனர். தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. யெருசலேம் கடவுளுக்கு பிரியமான இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான், அங்கு அவருடைய பிரசன்னத்தைக் காட்டினார். ஆனாலும், இடம் மட்டும் கடவுள் வாழ்வதற்கான காரணமாகிவிடாது. மனிதர்களும் விசாலமானவர்களாக இருக்க வேண்டும். யெருசலேம் கள்வர்களின் குகையாகிப்போனது. ஏழை, எளியவர்களை மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், நசுக்கும், அடிமைப்படுத்தும் இடமாக மாறிப்போனது. எங்கு ஏழைகள் நசுக்கப்படுகிறார்களோ, அங்கு ஏழைகளுக்கு ஆதரவாகத்தான் கடவுள் இருப்பார். அதற்காக தான் வாழக்கூடிய இடத்தைக்கூட, எதிரிகளிடம் கையளிக்கத் தயங்கமாட்டார், என்பதை இந்த நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

நமது உள்ளம் இறைவன் வாழும் இல்லம். அங்கே இரக்கம், அன்பு, மன்னிப்பு சுரக்க வேண்டும். அப்போதுதான், கடவுள் அங்கே இருப்பார். அநீதி, அக்கிரமம், பகைமை இருந்தால், அது கடவுள் வாழ முடியாத இடமாக மாறிவிடும். எனவே, இறைவன் வசிக்கக்கூடிய இல்லமாக, நம் உள்ளத்தை மாற்றுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.