வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.[ யோவான் 16:13]

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு நமது ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் நமது ஆண்டவரை நோக்கிப்பார்த்து அவர் பாதத்தில் அடைக்கலம் புகுந்தால் தமது தூய ஆவியானவர் மூலம் நாம் செய்ய வேண்டிய காரியங்களை நமக்கு வெளிப்படுத்தி நமது தேவைகளை சந்தித்து ஒரு தீங்கும் நம்மை தொடாதபடிக்கு பாதுகாத்துக்கொள்வார். தூய ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ளும் பொழுது அவர் நமது பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், நமக்கு வெளிப்படுத்தி நாம் கடந்து செல்லும் பாதையில் நம்மோடு கூடவே இருந்து நமக்கு போதிப்பார்.

இதுவரைக்கும் நீங்கள் என் பெயரால் ஒன்றுமே கேட்கவில்லை. கேளுங்கள், உங்கள் சந்தோஷம் எல்லாவற்றிலும் நிறைவாய் இருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். என் நாமத்தினால் வேண்டிக் கொள்வதை நானும் பிதாவிடம் கேட்டு உங்களுக்கு பரிபூரன ஆசீர்வாதத்தை கட்டளையிடும்படி அருள்செய்வேன், என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அவர் வாக்கு மாறாத தேவன். அவர் மனம் மாற மானிடர் அல்ல அவர் தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தர்.அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட அப்படியே நிற்கும்.

நாம் எந்த ஒரு சூழ்நிலையை கடந்து செல்ல நேரிட்டாலும் அவர் நம்மோடு இருக்கும் பொழுது ஒன்றுக்கும் கவலைப்பட தேவையில்லை. நம்முடைய பாடுகளிலும்,கஷ்டங்களிலும் அவர் நம்மோடு கூடவே இருந்து நம்மை காத்து வழிநடத்துவார்.அவர் இந்த உலகத்தை ஜெயித்தது போல நாமும் ஜெயிக்க அருள்புரிவார். நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.கவலைகள் யாவும் மறந்து போகும்.

நாம் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவரையே முழுதும் நம்பி, முழு இருதயத்தோடும், முழுமனதோடும் கெஞ்சிக்கூப்பிட்டால் நிச்சயம் நம் அருகில் வந்து நிற்பார். மகனே, மகளே, திகையாதீர், உன் தேவைகள் யாவையும் சந்தித்து உன் வருங்காரியத்தையும் உனக்கு அறிவிப்பேன் என்று சொல்லுவார். அவரையே நாம் நோக்கிப் பார்த்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்

அன்பின் இயேசுவே எங்களுக்காக அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி எங்களை மீட்டவரே உம்மை துதிக்கிறோம், போற்றுகிறோம். அப்பா நாங்கள் யாரிடம் போவோம், நீரே எங்கள் ஆண்டவர் உம்மையே கெஞ்சிக் கூப்பிடுகிறோம். எங்கள் வழியை தெரியப்படுத்தும். எங்கள் வருங்காரியம் யாவையும் அறிந்துள்ள தெய்வம் நீரே. நாங்கள் செய்ய வேண்டிய கடக்க வேண்டிய யாவற்றையும் போதித்து கிருபையாய் மனமிரங்கி உதவியருளும். உம்முடைய தூய ஆவியானவர் மூலம் எல்லா காரியத்தையும் செய்து முடிக்க அருள்புரியும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே!ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: