வாழ்க்கையைப் பற்றிய தெளிவு

இந்த உலகத்தில் நடக்கும் மரணங்களை இயற்கை மரணம், எதிர்பாராத மரணம், தற்கொலை மரணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். மரணம் எப்படி வந்தாலும், நமக்கு அது பயங்கரமான அனுபவத்தைத் தருகிறது. நன்றாக வாழ்ந்து, வயதாகி நேரக்கூடிய மரணமே நமக்கு கசப்பான அனுபவத்தைத் தருகிறபோது, மற்ற வகையான மரணங்களை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு மரணமும், நாம் எந்த வேளையிலும் தயாராக இருக்க வேண்டும் என்ற செய்தியைத் தந்தாலும், மனித மனம் அந்த செய்தியை உள்வாங்குவது கிடையாது. வெகு விரைவாகவே, அதனை மறந்துவிடும். இந்த விழிப்புணர்வு மரணத்தைப் பற்றி நாம் பயப்படுவதற்காக அல்ல, மாறாக, நமது நிலையை நாம் எப்போதும் உணர வேண்டும் என்பதற்காகவே என்று, இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகிறது.

வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வு, புரிதல், தெளிவு மக்களிடையே காண்பது அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. எதற்காக வாழ்கிறோம்? என்கிற சிந்தனையே அற்றவர்களாகத்தான், பலபேர் இருக்கிறோம். இந்த தெளிவு இருந்தால், நாம் வாழக்கூடிய வாழ்க்கை இப்போது இருப்பது போல் இருக்காது. பண்பட்ட ஒரு வாழ்வாக, மற்றவர்களுக்கு பயன்தரும் ஒரு வாழ்வாக அமையும். இப்படிப்பட்ட வாழ்வை நாம் வாழ வேண்டுமென்றால், வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். இந்த புரிதல் நம் அனைவருக்குமே கிடைக்க வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். எந்த ஒரு மனிதன், தன் வாழ்வைப்பற்றிய புரிதலோடு வாழ்கிறானோ, அவனால் இந்த உலகத்திற்கு நிச்சயம் பயன் உண்டு. வாழ்வைப்பற்றிய தேடலும், தெளிவும் இல்லாதவர்களால் தான், இந்த உலகம் சீரழிந்து கிடக்கிறது.

நாம் நமது வாழ்வை எப்படி வாழ்கிறோம்? நமது வாழ்வைப்பற்றிய அக்கறை, நமது வாழ்வின் நோக்கம், எதற்காக இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது? போன்ற கேள்விகளையெல்லாம் எழுப்பி, நம்மையே கேட்டுப்பார்க்கிறோமா? நமது வாழ்வை மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் வாழ முயல்கிறோமா? சிந்திப்போம், அதற்கேற்ப செயல்படுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: