வாழ்வாகும் வழிபாடு

”நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என சீடர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர். பாஸ்கா விருந்திற்கு என்னென்ன ஏற்பாடு செய்ய வேண்டும்? என்கிற கேள்வி நமக்குள்ளாக எழுவது இயல்பு. பாஸ்கா விழா கொண்டாட அடிப்படையில் நான்கு வகையான பொருட்கள் வைக்கப்பட வேண்டும். அவற்றை இங்கே விளக்கமாகப் பார்ப்போம்.

  1. ஒரு சிறிய பாத்திரத்தில் உப்புத்தண்ணீர். இந்த உப்புத்தண்ணீரின் பொருள் என்ன? இந்த உப்புத்தண்ணீர் இஸ்ரயேல் மக்களின் கண்ணீரைக் குறிக்கக்கூடிய அடையாளமாக இருக்கிறது. எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, துன்பத்தினால் அவர்கள் கண்ணீர் வடித்தார்கள். அந்த கண்ணீரையும், மேலும், பாதுகாப்பாகச் செங்கடலைக்கடந்தனர். அந்த செங்கடல் உப்புத்தண்ணீர் சுவையுடையது. இவற்றை நினைவுகூற உப்புத்தண்ணீர் வைக்கப்பட்டது.
  2. கசப்பான மூலிகை இலைகள். இந்த கசப்புச்சுவையுடைய மூலிகைச்செடிகள் அடிமைத்தனத்தின் கசப்புணர்வையும், செம்மறி ஆட்டின் இரத்தத்தை, இஸ்ரயேலரின் வீடுகளில் தோய்க்கப் பயன்படுத்திய ஈசோப்புத்தண்டின் சுவையையும் நினைவுபடுத்துகிறது.
  3. கெரோசெத் பசை: (Charosheth Paste) இந்த பசை, ஆப்பிள், பேரீச்சை, மாதுளம் மற்றும் முந்திரிப்பருப்பைச் சேர்த்து அரைத்து, செய்யப்பட்ட பசை. எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் கட்டிடங்களைக்கட்ட செங்கற்களைச் செய்தனர். அடிமைகளாக செங்கற்களைச் செய்வதற்கு, களிமண்ணையும், இந்த பசையையும் சேர்த்து, செங்கற்களை உருவாக்கினர். அதனை இது குறிப்பதாக இருக்கிறது.
  4. நான்கு கிண்ணங்களில் திராட்சை இரசம்: இவை கடவுளின் நான்கு வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவுபடுத்தக்கூடியவை. விடுதலைப்பயணம் 6: 6 – 7 ல் இந்த வாக்குறுதிகளைப் பார்க்கிறோம். ”எகிப்தியரின் பாரச்சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன். உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன். ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களக்கு மீட்பளிப்பேன். உங்களை என் மக்களாகவும், உங்களுக்கு கடவுளாகவும் நான் இருப்பேன்”. இந்த நான்கு வாக்குறுதிகளின் நினைவாக நான்கு திராட்சை இரசக் கிண்ணங்கள் வைக்கப்பட்டது. இந்த தயாரிப்பைத்தான் பாஸ்கா விழா கொண்டாட சீடர்கள் செய்ய வேண்டியதாக, இயேசு அவர்களிடம் சொன்னார்.

வழிபாடு என்பது வெறும் சடங்கல்ல. அது வாழ்வை மாற்றக்கூடிய வழிமுறை. வழிபாட்டில் பங்கெடுக்க நம்மையே நாம் நல்ல முறையில் தயாரிக்க வேண்டும். தயாரிப்போடு கூடிய வழிபாடுதான், கடவுளின் இரக்கத்தையும், இறையருளையும் நமக்குப் பெற்றுத்தரும். புனித வார வழிபாடுகளில் பங்கெடுக்க இருக்கிற நாம், முதலில் அதற்கான நல்ல தயாரிப்பில் ஈடுபடுவோம். இறைவனின் அருளை நிறைவாகப் பெறுவோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: