வாழ்வின் சவால்களில் இறைப்பராமரிப்பு

கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கிறது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கிறவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கிறவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கிறோம். இந்த மனிதர்களுக்கு நடுவில் தான், நாம் வாழ வேண்டும். இவர்களோடு தான் நமது வாழ்வும் இணைந்து இருக்கிறது. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இவர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கிறோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கிறோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகிறோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறோம். நாம் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம். இப்படியான சோதனையான காலக்கட்டத்தில் தான், நாம் கடவுளின் பராமரிப்பை அதிகமாக உணர வேண்டும். அவரது வழிநடத்துதலை நாம் அனுபவிக்க வேண்டும். அதைத்தான் இந்த நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது.

கடவுளின் ஆழமான அன்பு எப்போதும் நமக்கு உண்டு. நாம் ஒருநிமிடம் கூட சோர்ந்து போகக்கூடாது. அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற அந்த நம்பிக்கை, வாழ்வில் துணிவோடு, மகிழ்வோடு நாம் இருக்க நமக்கு உதவியாக இருக்க வேண்டும். நல்ல நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாய் நாம் வாழ அருள்வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: