வாழ்வின் முக்கிய தருணங்கள்

ஒரு சில தருணங்கள் வாழ்வில் முக்கியமானவை, திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த தருணங்களை இழந்துவிட்டால், அது மீண்டும் கிடைக்காது. நமது வாழ்வில் நாம் உயர்வடைய கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்ததால், நமது வாழ்க்கை துன்பங்களோடு முடிந்துவிட்ட ஒன்றாகக்கூட மாறலாம். எனவே, வாழ்வைப் பற்றிய அக்கறை, உயர வேண்டும் என்கிற எண்ணம், எப்போதும் நமது சிந்தனைகளை கூர்மையாக வைத்திருக்கக்கூடிய உணர்வு நமக்கு இருப்பதற்கு இன்றைய வாசகம் அழைப்புவிடுக்கிறது.

மனிதர்களில் இரண்டுவிதமானவர்கள் இருப்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது. கிடைக்கிற சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கிறவர்கள். பெரிதாக வாய்ப்பு கிடைத்தாலும் வீணடிக்கிறவர்கள். இரண்டுவிதமான மணமகளின் தோழியர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். மணமகன் வருகிறபோது, அவர்கள் தயாராக இருக்க வேண்டும், எண்ணெய் குறைவில்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல. நிச்சயம் தெரியும். நிச்சயம் மணமகன் வந்தே தீருவார். ஆனால், விரைவில் வரலாம், சற்று தாமதமாக வரலாம் என்பதும் அவர்கள் அறிந்ததே. நேரத்திற்கு ஏற்றாற்போல, சூழ்நிலைக்கு தக்கபடி தங்களை தயார்படுத்திக் கொள்ள அவர்கள் மதியில்லாமல் இருந்து விடுகிறார்கள்.

முன்மதியில்லாத இந்த பெண்களைப் போலத்தான், நம்மில் பலர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விவேகமாக, அறிவாக நடக்கும் மனநிலை அற்றவர்களாக இருக்கிறோம். இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நல்லமுறையில், நம்பிக்கையோடு வாழ்வை வாழ, கடவுளிடம் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: