வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள்

திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்ச்சிகளையெல்லாலம் அனுபவித்திருந்த செக்கரியா, தனது மகனைப்பற்றிய நீண்டதொரு கனவை வைத்திருந்தார். கடவுள் பக்தியுள்ள ஒவ்வொரு பாரம்பரிய யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்தனர். கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மெசியா வந்து, அவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். மெசியாவின் வருகைக்கு முன்னால், அவருடைய முன்னோடி வந்து, அவருக்கான வழியை ஆயத்தம் செய்வார் என்றும் உறுதியாக நம்பினர். செக்கரியா தனது மகனை மெசியாவின் முன்னோடியாக கனவு கண்டார். தான் அனுபவித்த நிகழ்ச்சிகள், கண்ட காட்சிகள் வழியாக, திருமுழுக்கு யோவான் தான், மெசியாவின் முன்னோடி என்பதை, அவர் ஆணித்தரமாக நம்பினார்.

நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுமே ஏதோ ஒரு செய்தியை நமக்குத் தந்து கொண்டிருக்கிறது. தெளிவான பார்வையுடன், நமது அனுபவத்தையும் அத்தோடு இணைத்துப் பார்த்தால் நம்மால் அதை தெளிவாக உணர முடியும். அத்தகைய தெளிவைத்தான், செக்கரியா தனது வாழ்க்கையில் கண்டார். கடவுளின் செய்தியை நாம் அறிந்து கொள்ள, நமது வாழ்க்கை நிகழ்ச்சிகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.

நமது வாழ்வு இலக்கின்றி சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகத்தோடு இணைந்து செல்ல நாம் பழகிவிட்டோம். ஆனால், அது உண்மையான வாழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும், நாம் செய்கின்ற செயல்களை, நமது வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் ஆராய வேண்டும். கடவுள் நமக்கு காட்டுகின்ற செய்தியை அறிந்துகொண்டு, அதன் வழியில் நாம் செல்ல வேண்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: