வாழ்வு தரும் இறைநம்பிக்கை

சீடர்களின் குழப்பமான மனநிலைக்கு எடுத்துக்காட்டு இன்றைய பகுதி. சீடர்கள் இயேசுவோடு இருந்ததின் பிண்ணனி, தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு தான். இதை மட்டும் நாம் கணக்கில் எடுத்து சீடர்களை விமர்சனம் செய்ய முடியாது. அப்படி விமர்சித்தால், அது தவறாக முடிந்து விடும். இயேசு தனது சாவைப்பற்றி அறிவித்தபோதும், துன்பக்கிண்ணத்தை குடிக்க இருப்பதாக சொன்னபோதும், சீடர்கள் அவரை விட்டுவிட்டு ஓடவில்லை. மாறாக, எதற்கும் தயார் என்று சொல்கிறார்கள். இரண்டுமே நேர் எதிர் மனநிலையைக் குறிக்கிறது.

இந்த இரண்டுமே சீடர்களின் குழப்ப மனநிலையையும் உறுதிப்படுத்துகிறது. அப்படியென்றால், இவ்வளவு குழப்ப மனநிலையில் எது சீடர்களை இயேசுவோடு இணைத்துக் கட்டிபோட்டது? எது இயேசுவோடு அனைத்தையும் பொறுத்துக்கொள்ள தூண்டுகோலாக இருந்தது? எது இயேசு மீது முழுமையான அன்பு வைத்து, அவரோடு இருப்பதற்கு உறுதுணையாக இருந்தது? இயேசு மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர்கள் குழப்ப மனநிலையில் இருந்தாலும், இயேசு மீது வைத்திருந்த நம்பிக்கையை எந்த விதத்திலும் நாம் களங்கம் கற்பிக்க முடியாது. அந்த நம்பிக்கை தான் இயேசுவுக்காக எதையும் இழக்கும் ஆற்றலையும், உறுதியையும் தந்தது.

இயேசுவின் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறபோது, எதையும் நம்மால் தாங்க முடியும், நிறைவோடு வாழ முடியும். வாழ்வு தரும் இறைநம்பிக்கை. அந்த இறைநம்பிக்கையை நமது வாழ்வில் கொண்டு, முழுமையாக, மகிழ்ச்சியாக வாழ்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: