வாழ்வை மாற்றுங்கள்

சீடர்கள் இயேசுவிடத்திலே யார் பெரியவர்? என்ற கேள்வி கேட்கிறார். இயேசு அவர்களிடத்தில் ”நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் சொல்கிறார். சீடர்கள் நிச்சயம் இந்த பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதை, இதை எல்லாம் செய்யுங்கள், நீங்கள் விண்ணரசிற்குள் நுழைய முடியும் என்ற பாணியில், இயேசுவின் பதில் அமைந்திருக்கும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இயேசு முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலைத் தருகிறார். அவர்களை மனம் மாறுவதற்கு, மாற்றம் பெறுவதற்கு அழைப்புவிடுக்கின்றார்.

இதனுடைய அர்த்தம் என்ன? இயேசு எதற்காக மனமாற்றத்தைப் பற்றி இங்கு பேசுகிறார்? அப்படி மனமாற்றம் இல்லையென்றால், விண்ணரசிற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்கிறார். ஏன்? இயேசுவோடு இருந்து, அவருக்குப் பின்னால் அவருடைய பணி செய்யக்கூடிய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சாதாணமானவர்கள் கேட்கக்கூடிய கேள்வியை கேட்டு, தங்களுக்குள் சண்டையிடுவது இயேசுவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடாகத்தெரிந்தது. அவர்களை சரியான பாதைக்கு அழைத்து வருவது, போதகராகிய அவருடைய கடமையாக இருந்தது. தங்களை எப்போதும் உயர்வாக நினைக்கக்கூடிய யாரும், விண்ணகத்திற்கு எதிராகத்தான் சென்று கொண்டிருக்க முடியும். விண்ணகத்திற்கு வழிகாட்டிகளாக இருக்கக்கூடிய சீடர்கள் அந்த மனநிலையோடு, தங்களது கடமையை சிறப்பாகச் செய்ய முடியாது என்பதால் தான், இயேசு அவர்களுக்கு சரியான பதிலைத்தருகிறார்.

நமது வாழ்வில் நமது எண்ணம், சிந்தனை, ஏக்கங்கள் விண்ணகம் நோக்கியதாக இருக்க வேண்டும். விண்ணகத்திற்கு புறம்பாக இருக்கக்கூடிய விழுமியங்களை நாம் அறவே அகற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால், விண்ணகத்திற்குச் செல்வதற்கான வழி என்பது, தன்னையே இழப்பது என்பதுதான். அங்கே ஆணவத்திற்கோ, அகங்காரத்திற்கோ நிச்சயம் இடம் கிடையாது.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: