விசுவாசக்கண் கொண்டு கடவுளைப் பார்க்க…

“கண்டு நம்புவது“ என்பது அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், பொதுவாக, பார்த்தால் நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கேட்பதை வைத்து நம்புகிறவர்களை விட, பார்ப்பதை வைத்து நம்புகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். உண்மை என்று தெரிய வேண்டுமென்றால், நானே நேரிடையாக சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தான் அதிகம். இயேசுவின் சீடருள் ஒருவரான தோமாவும், நான் கண்டால் தான், இயேசு உயிர்த்திருக்கிறார் என்று நம்புவேன் என்று சொல்கிறார். இந்த வரிசையில் இன்றைய நற்செய்தியில் வரும் யூதர்களும், அடையாளங்களையும், அருங்குறிகளையும் கண்டு நம்புகிறோம், என்று சொல்கிறார்கள்.

நமது வாழ்க்கை வெறும் கண்களால் பார்ப்பதை அடிப்படையாக வைத்து மட்டும் வாழ்ந்தால், நாம் தாம் ஏமாளிகளாக இருப்போம். ஆனால், வாழ்வை, நடக்கும் நிகழ்வுகளை பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்தால் தான், சரியான வழியில் செல்ல முடியும். இதை இயேசு நமக்கு கற்றுத்தருகிறார். அவர்கள் மோசேயை நம்பினதாகச் சொல்கிறார்கள். ஆனால், மோசே அவர்களுக்கு மன்னா கொடுத்த உணவை, தவறான பார்வையில் பார்க்கிறார்கள். மோசே தான், தங்களுக்கு உணவு கொடுத்தார் என்று நினைக்கிறார்கள். ஆனால், இயேசு தெளிந்த பார்வையோடு கடவுள் தான் அவர்களுக்கு மன்னா கொடுத்தவர் என்று சொல்கிறார். ஆக, ஊனக்கண்களால் பார்ப்பதை விட, வாழ்வின் நிகழ்வுகளை விசுவாசக்கண் கொண்டு பார்ப்பதுதான், கடவுளை முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.

நமது வாழ்வும், வாழக்கூடிய காலச்சூழலும் ஐம்புலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனைத்தாண்டியும் நாம் கடவுளை அறிந்து கொள்ள முடியும் என்பதை, இயேசு நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். கடவுளை நாம் விசுவாசக்கண் கொண்டு பார்ப்பதற்கு முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: