விடாப்பிடியான செபம் !

இன்று செபத்தின் வலிமையைப் பற்றி ஆண்டவர் இயேசு கூறும் உவமைக்கு செவிமடுக்கிறோம். அருமையான உவமை. நண்பரிடம்கூட உதவி கேட்க முடியாத இக்கட்டான நேரம் நள்ளிரவு நேரம். அந்த நேரத்தில் கதவைத் தட்டி உதவி கேட்பரிடம் மறுத்துப் பேசியபின்னும், நண்பர் என்பதற்காக அல்லாது, தொல்லையின் பொருட்டாவது கேட்ட உதவியைக் கொடுத்துவிடுவது மனித இயல்பாக இருக்கிறது என்று உளவியல் வழி பாடம் சொல்கிறார் இயேசு. மனித இயல்பே தொந்தரவுக்குப் பணிகிறதே, இறை இயல்பு நிச்சயம் பரிவு கொள்ளும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் இயேசு. விடாப்பிடியாய் என்று சொல்லாடல் நண்பரின் முயற்சிக்கு அணி சேர்க்கிறது.

நாமும் விடாமுயற்சியுடன், தளரா நம்பிக்கையுடன் இறைவனை நோக்கி மன்றாட வேண்டும் என்று அழைக்கிறார் இயேசு. எனவே, நமது நம்பிக்கையைக் கொஞ்சம் ஆழப்படுத்திக் கொள்வோம். அத்துடன், விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி என்றும் இயேசு கூறி, எதற்காக விடாப்பிடியாய் மன்றாட வேண்டும் என்பதையும் தெளிவு படுத்துகிறார். சொந்த வீடு, பதவி உயர்வு, நல்ல மாப்பிள்ளை போன்ற தேவைகளுக்காக விடாப்பிடியாய் மன்றாடுவதைவிட தூய ஆவியின் ஞானத்திற்காக இடைவிடாமல் மன்றாடுவது சிறப்பானது.

மன்றாடுவோம்: கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். எங்களுடைய தேவைகளில் சலிக்காமல் உம்மை நோக்கி மன்றாட அழைப்பு விடுப்பதற்காக நன்றி. தந்தையே, அனைத்திற்கும் மேலாக தூய ஆவி என்னும் கொடைக்காக உம்மை வேண்டுகிறோம். ஞானத்தின் ஆவியை எங்களுக்குத் தந்து எங்களை நிறைவு செய்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: