விண்ணக அதிகாரம்!

இயேசுவின் அதிகாரத்தைப் பற்றித் தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், மூப்பர்களும் கேள்வி எழுப்பியபோது, இயேசு யோவானின் அதிகாரத்தைப் பற்றி எதிர்க் கேள்வி ஒன்றைக் கேட்கின்றார். “திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு எங்கிருந்து வந்தது? விண்ணிலிருந்தா, அல்லது மனிதரிடமிருந்தா?”. அவர்கள் இக்கேள்விக்கு விடை அளிக்கவில்லை, விடையளிக்க விரும்பவில்லை. எனவே, இயேசுவும் அவர்களின் கேள்விக்கு விடை கொடுக்கவில்லை.

ஆனால், விண்ணக அதிகாரத்தைப் பற்றிய இரு கருத்துகளை இந்த நிகழ்விலிருந்து அறிகிறோம்.

1. விண்ணிலிருந்து வரும் அதிகாரத்தை நாம் நம்பவேண்டும். யோவானின் அதிகாரத்தை, இயேசுவின் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவர்களின் நம்பிக்கைக் குறைவு. இறை நம்பிக்கை உள்ளோரே இறையடியார்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இன்னொரு வகையில் சொல்லப் போனால், குருக்கள், துறவிகள், நற்செய்திப் பணியாளர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம்.

2. விண்ணக அதிகாரம் கொண்டவர்களை மக்கள் “இறைவாக்கினர்களாக”க் கருதுகின்றனர். யோவானை மக்கள் இறைவாக்கினராகக் கருதியதால், அவரது அதிகாரம் மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்ல மறைநூல் அறிஞர்கள் அஞ்சினார்கள் என்று வாசிக்கிறோம். எனவே, உண்மையான விண்ணக அதிகாரம் மனிதரின் நல்லெண்ணத்தை, நன்மதிப்பைப் பெற்றிருக்கும் என அறிகிறோம்.

இறைபணி செய்வோரும், இறைமக்களும் இவைகளை மனதில் கொள்ளவேண்டும். இறைபணி செய்வோர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும். மக்கள் இறையடியாரை விண்ணக அதிகாரம் கொண்டவர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மறையூழியர்களை உமது அடியார்களாக ஏற்றுக்கொள்ளும் நல்மனதை மக்களுக்குத் தந்தருளும். மக்களின் நல்மதிப்பைப் பெறும் வண்ணம் மறையூழியர்களின் வாழ்வும், பணியும் அமைய அவர்களை ஆசிர்வதியும், ஆமென்.

~ அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: