விலகிச்சென்றார்…

இன்றைய நற்செய்தியில் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37′) இயேசு அருமையான ஓர் உவமை வாயிலாக, வாழ்வின் முக்கியமான செய்தியைத்தருகிறார். நல்ல சமாரியன் உவமையில் வரக்கூடிய குருவும், லேவியரும் “விலகிச்சென்றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டுபேருமே மறுபக்கமாய் விலகிச்செல்கிறார்கள். எதற்காக விலகிச்சென்றார்கள்? ஒன்று தீட்டுப்பட்டுவிடும் என்பதற்காக. இரண்டாவது, தங்களுக்கு இருக்கக்கூடிய பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காக. இரண்டுமே தவறுதான். இரண்டு பேருமே, கடவுளின் இறையருளை நிறைவாக, உடனடியாகப் பெற்றுத்தரும் வாய்ப்பை இழந்து சென்று விட்டார்கள் என்பதுதான் உண்மை.

விலகிச்செல்வது தவறல்ல. தீய நண்பர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். தவறான பழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். கெட்ட எண்ணங்களிலிருந்து, கெட்ட வார்த்தைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. எவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டுமோ, அவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. நல்ல செயல்களைச் செய்வதிலிருந்து, நல்லவற்றைப் பார்ப்பதிலிருந்து, நல்லவற்றைக் கேட்பதிலிருந்து நாம் விலகியிருக்கக்கூடாது. அவற்றோடு இருக்க வேண்டும். ஆனால், அவற்றிலிருந்துதான் நாம் விலகியிருக்கிறோம். அவற்றிலிருந்து நாம் விலகியிருக்கிறபோது, கடவுளின் அருளை நாம் இழந்துவிடுகிறோம்.

நமது வாழ்வில் நாம் நல்ல செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சி எடுப்போம். அந்த வழிகள் தான், கடவுளின் பேராசீரை நமக்கு பெற்றுத்தரக்கூடிய உன்னதமான வழிகள். அந்த வழிகள் தான், கடவுளோடு நாம் நெருங்கி வருவதற்கான வழிகள். அந்த வழிகளில் நாம் நம்மையே முழுமையாக ஈடுபடுத்துவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: